Last Updated : 21 Mar, 2022 11:13 AM

 

Published : 21 Mar 2022 11:13 AM
Last Updated : 21 Mar 2022 11:13 AM

பிரதமருக்கு நாடு முழுவதும் செல்வாக்கு என்றால் பஞ்சாப்பில் பாஜகவுக்கு படுதோல்வி ஏன்? - நாராயணசாமி கேள்வி

நாராயணசாமி.| கோப்புப் படம்

புதுச்சேரி: பிரதமர் நாடு முழுவதும் செல்வாக்கு மிகுந்த தலைவர் என்று ஏற்றுக்கொண்டால் பஞ்சாப்பில் பாஜக ஏன் படுதோல்வி அடைந்தது? என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று (மார்ச் 20) இரவு வெளியிட்ட வீடியோ பதிவில், ‘‘சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் உட்கட்சி பூசல் காரணமாக காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியே சென்ற முன்னாள் முதல்வருடன், பாஜக கூட்டணி சேர்ந்து பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் பிரச்சாரம் செய்தும் அவர்களால் ஒரு இடம் கூட பெறமுடியவில்லை. உண்மையிலேயே பிரதமர் இந்த நாடு முழுவதும் செல்வாக்கு மிகுந்த தலைவர் என்று ஏற்றுக்கொண்டால் பஞ்சாப்பில் பாஜக ஏன் படுதோல்வி அடைந்தது?.

காங்கிரஸ் கட்சியினர் இந்தத் தோல்வியைக் கண்டு துவண்டுவிடக்கூடாது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி தோல்வி என்பது சகஜம். இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான தலைவர்கள், தொண்டர்கள் காங்கிரஸ் கட்சியை தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். தலைவர்களாக சோனியா, ராகுல்காந்தி இருக்கின்றனர். இவர்கள் தலைமையில், ஒருமித்த கருத்துக்களை கொண்ட மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தால் பாஜகவை எளிதாக வீழ்த்திவிடலாம். அதற்கான வியூகத்தை இப்போதே ஆரம்பிக்க வேண்டும். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவு செய்யும் நேரத்தில் உள்ளனர். ஆனால் முதல்வர் ரங்கசாமி மத்திய அரசிடம் இருந்து நாங்கள் வாங்கியதைவிட ஒரு பைசா கூடுதல் நிதி பெறவில்லை.

புதுச்சேரி மாநிலம் நிதி பற்றாக்குறையில் தத்தளிக்கிறது. திட்டங்களை அறிவித்து அதனை நிறைவேற்ற இந்த அரசு திணறுகிறது. மத்தியில் உள்ள பாஜக அரசின், அங்கமாக புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி இருக்கிறது. முதல்வர் ரங்கசாமி மத்திய அரசோடு இணக்கமாக இருக்கிறார். ஏன்? அவரால் முழு பட்ஜெட்டை போடுவதற்கான அனுமதியை மத்திய அரசிடம் இருந்து பெற முடியவில்லை. புதுச்சேரி பாஜக தலைவர்கள் அதற்கு முட்டுக்கட்டை போடுகிறார்களா? அல்லது மத்திய நரேந்திர மோடி அரசு ரங்கசாமி முழு பட்ஜெட்டை போடக்கூடாது என தடுத்து நிறுத்துகின்றனரா? இதற்கு முதல்வர் ரங்கசாமியும், பாஜகவினரும் விளக்கம் அளிக்க வேண்டும். நாங்கள் ஆட்சியில் இருந்த சமையத்தில் எந்த அளவுக்கு கிரண்பேடி தொல்லை கொடுத்தாரோ? மத்திய உள்துறை அமைச்சரகம் நாங்கள் திட்டங்களை நிறைவேற்றும்போது அதற்கு முட்டுக்கட்டை போட்டதோ, அந்த நிலை இப்போது இல்லை. இந்த சூழ்நிலையில் நீங்கள் ஏன் இந்த முழு பட்ஜெட்டை போட முடியவில்லை? அப்படியென்றால் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருக்கிறதா? என்பதை ரங்கசாமி அறிவிக்க வேண்டும்.

ரங்கசாமி தலைமையிலான ஆட்சியில் முதல்வர் அலுவலகத்தில் இருந்து அனைத்து அமைச்சர்கள் அலுவலகத்திலும் தரகர்கள் அமர்ந்து கொண்டு பேரம் பேசுகின்றனர் என நான் கூறியிருந்தேன். அது இப்போது காவல்துறை பணியாளர் தேர்வில் ஊர்ஜீதம் ஆகியுள்ளது. ரூ. 7 லட்சம் வரை கேட்கப்படுகிறது. இந்த நிலை வந்தால் புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு ஊழல் நிறைந்த அரசு என மக்கள் தீர்மானித்துவிடுவார்கள். எனவே ரங்கசாமி ஊழலற்ற ஆட்சி நடத்தினால்,

நேரடியாக தலையிட்டு தகுயின் அடிப்படையில் வேலை வாய்ப்பை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ரங்கசாமியும் ஊழலுக்கு துணைபோனார் என்பதை நாங்கள் பகிரங்கமாக மக்கள் மத்தியில் சொல்ல வேண்டிய சூழல் ஏற்படும். இதனை நான் ஒரு எச்சரிக்கையாக சொல்கிறேன்.

காஷ்மீர் பைல்ஸ் போன்ற மதக்கலவரத்தை தூண்டுகின்ற படத்தை புதுச்சேரி ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் சென்று பார்த்துள்ளனர். இந்த படத்தின் மீது ஆளுநருக்கு என்ன அக்கறை. இதிலிருந்து ஆளுநர் அரசியல் செய்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. அரசின் நிர்வாகத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் சென்று பார்க்கும்போது, மதக்கலவரத்தை தூண்டுவதற்கு உதாரணமாகவும், காரணமாகவும் இருக்கிறார்களா என்ற கேள்வி எழும். எனவே இந்த படத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதுபோன்ற படங்களுக்கு அனுமதி அளிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x