

சத்தீஸ்கரில் நக்ஸல்கள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி உயிரிழந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) வீரர் விஜயராஜின் உடல் அரசு மரியாதையுடன் 42 துப்பாக்கி குண்டுகள் முழங்க நேற்று அம்பத்தூர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
சத்தீஸ்கர் மாநிலம், தண்டே வாடா மாவட்டம், மேளவாடா கிராமத்தில் உள்ள பசாரஸ்- குவாகொண்டா பகுதியில் கடந்த மாதம் 30-ம் தேதி நக்ஸல்களால் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்ததில் வாகனத் தில் பயணம் செய்த, சென்னை அருகே உள்ள அம்பத்தூரைச் சேர்ந்த விஜயராஜ்(45) உட்பட 7 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். கடந்த 1991-ம் ஆண்டு, சென்னையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கான்ஸ்டபிளாக தன் பணியை தொடங்கிய விஜயராஜ், உதவி சப் - இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்ற 3- வது நாளில் உயிரிழந்த சம்பவம், விஜயராஜின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சத்தீஸ்கரில் இருந்து ஹெலி காப்டர் மற்றும் விமானம் மூலம் சென்னை வந்தடைந்த விஜயராஜின் உடலை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், நேற்று முன்தினம் இரவு, அம்பத்தூரில் உள்ள குடும் பத்தினரிடம் ஒப்படைத்தனர். அமைச்சர் கோகுல இந்திரா, திரு வள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தர வல்லி உட்பட ஏராளமானோர் அஞ் சலி செலுத்தினார். தமிழக அரசு சார்பில், விஜயராஜின் மனைவி சர்மிளாவிடம், 10 லட்சம் ரூபாய்க் கான காசோலையை ஆட்சியர் சுந்தரவல்லி வழங்கினார்.
ஆவடி மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் டிஐஜி இளங்கோ, எஸ்பி மோசஸ் தினகரன், சரக டிஐஜி எஸ்.கே.மிஸ்ரா, அம்பத் தூர் துணை காவல் ஆணையர் சுதாகர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, காலை 9.30 மணியளவில், காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன், மலர் களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத் தில் விஜயராஜின் உடல் அம்பத்தூர் மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது.
தமிழக காவல் துறை சார்பிலும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் சார்பிலும் 42 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப் பட்டது. விஜயராஜின் சகோதரர் மோகன்ராஜ், இறுதிச்சடங்கு செய் ததையடுத்து, எரிவாயு தகன மேடையில் விஜயராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது. விஜய ராஜின் தாய் மோகனாபாக்யவதி, மனைவி சர்மிளா, மகள் விஷா மற்றும் உறவினர்கள், நண்பர் கள், பொதுமக்கள் என நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றனர்.
ஆவடி மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் டிஐஜி இளங்கோ, செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘வீர மரணமடைந்த விஜயராஜின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார் பில் 10 லட்சம் ரூபாய் வழங்கப் பட்டுள்ளது. அதேபோல், சத்தீஸ்கர் மாநில அரசு சார்பில் 28 லட்சம் ரூபாய் மற்றும் சிஆர்பிஎப் சார்பில் 21 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. மேலும், விஜயராஜின் மகள் படிப்பு முடிந்த பிறகு, அவருக்கு அரசு பணி கிடைக்கும். விஜயராஜின் குடும்பத்தினருக்கான உதவிகளை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கையில் சிஆர்பிஎப் ஈடுபடும்” என்றார்.
விஜயராஜின் மனைவி சர்மிளா கூறும்போது, ‘‘சத்தீஸ்கரில் கண்ணி வெடி தாக்குதலில் ஈடுபட்ட நக்ஸல் கள் தங்களுக்கும் குடும்பம் இருப் பதை உணர வேண்டும்” என்றார்.
கருணாநிதி இரங்கல்
திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: சத்தீஸ்கர் மாநிலத்தில் விஜயராஜ் தலைமையில் 7 காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கண்ணிவெடியை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
விஜயராஜ் மற்றும் 7 காவலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.