மீண்டும் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு: விதிகளை பின்பற்ற மக்களுக்கு சுகாதாரத் துறை செயலர் அறிவுரை

மீண்டும் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு: விதிகளை பின்பற்ற மக்களுக்கு சுகாதாரத் துறை செயலர் அறிவுரை
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் மீண்டும் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் விதிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 25-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம்இடங்களில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 5.53 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாம் தொடர்பாக சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 92 சதவீதம் பேருக்கு முதல்தவணையும், 80 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 12 முதல் 14 வயதுடைய 4.29 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும், 51 லட்சம் பேர் முதல்தவணையும், 1.34 கோடி பேர்இரண்டாம் தவணையும் தடுப்பூசிபோடாமல் உள்ளனர். தமிழகத்தில் கடந்த ஜனவரி 29-ம் தேதிக்குப் பிறகு நடைபெற்ற எந்த மெகா தடுப்பூசி முகாமிலும் தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டவில்லை. தடுப்பூசி போடும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜெர்மனி, தென்கொரியா, வியட்நாம் போன்ற நாடுகளில் லட்சக்கணக்கான கரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று முற்றிலும் ஒழிந்துவிட்டது என்று பொதுமக்கள் கருத வேண்டாம். எனவே, மக்கள் கரோனா தொற்று விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இந்தியாவில் மற்ற மாநிலங்களில் ஏராளமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்திலும் கரோனா தொற்று அதிகரிக்கலாம். கரோனா ஒழிக்கப்பட்ட நோய் எனக் கருதி,கவனக்குறைவாக இருந்தால், மற்ற நாடுகள் சந்திக்கும் பிரச்சினைகளை நாமும் சந்திக்க நேரிடும். தமிழகத்தில் அனைத்துமருத்துவக் கட்டமைப்புகளும் தயார் நிலையில் உள்ளன.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, தென்காசி போன்ற மாவட்டங்களில் தடுப்பூசி போடுவது சவாலாக உள்ளது. பொதுமக்கள் தமிழக அரசுக்கு கூடுதல் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in