

சென்னை: பருவத்தேர்வில் மாணவர்கள் தாமதமாக பதிவேற்றம் செய்த விடைத்தாள்களும் நிச்சயம் மதிப்பீடு செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வு இணைய வழியில் கடந்த பிப்.22 முதல் மார்ச் 12-ம்தேதி வரை நடத்தப்பட்டது. விடைத்தாள்கள் திருத்தும் பணி தற்போது நடந்து வருகிறது.
இதற்கிடையே, ஒவ்வொரு தேர்வு எழுதிய பிறகும், விடைத்தாள்களை மாணவர்கள் மதியம் 2 மணிக்குள் மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் செயலி வழியாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் அறிவுறுத்தி இருந்தது. இந்தநிலையில், ‘தாமதமாக பதிவேற்றம் செய்த மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தம் செய்யக்கூடாது. அவர்களுக்கு ‘தேர்வில்பங்கேற்வில்லை’ (Absent) என்றுகுறிப்பிடுமாறு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது’ என்று தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் பயிலும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவானது.
இதுகுறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
அண்ணா பல்கலைக்கழக பருவத்தேர்வு எழுதிய மாணவர்களில் தாமதமாக பதிவேற்றம் செய்தவர்களின் விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்படாது என்று வெளியான தகவல்கள் தவறானது.
மாணவர்கள் தாமதமாக விடைத்தாள்களை பதிவேற்றம் செய்திருந்தாலும், நிச்சயம் அவை மதிப்பீடு செய்யப்படும். அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
இனி நேரடியாகவே தேர்வு
முதலாண்டு மாணவர்களுக்கு மார்ச் 21-ம் தேதி (இன்று) முதல் பருவத்தேர்வுகள் நேரடி முறையில் நடக்க உள்ளது.இணையவழி தேர்வுகள் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உகந்ததாக இருப்பதில்லை. எனவே, இனிவரும் காலங்களில் நேரடி முறையிலேயே தேர்வுகள் நடத்தப்படும்.
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் இந்த கல்வி ஆண்டு முதலே அமலுக்கு வரும்.
தமிழ் வழியில் பொறியியல் படிப்பதற்கு தமிழக அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கும். தமிழக அரசின் நிதிநிலை சரியானதும், கல்விக் கடன் குறித்த அறிவிப்பு நிறைவேற்றப்படும். புதிய தேசிய கல்விக் கொள்கை சார்ந்து பல்வேறு திட்டங்களை யுஜிசி வெளியிட்டு வருகிறது. இதுகுறித்து ஆராய்ந்து முடிவெடுக்க குழு அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.