Published : 21 Mar 2022 08:44 AM
Last Updated : 21 Mar 2022 08:44 AM

ஆட்டிசம் விழிப்புணர்வு ஏற்படுத்த பாக் ஜலசந்தி கடலை 13.05 மணி நேரத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்த சிறுமி

ராமநாதபுரம்: ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 13.05 மணி நேரத்தில் ஆட்டிசம் பாதித்த மும்பை சிறுமி ஜியாராய் நீந்தி கடந்து சாதனை படைத்தார்.

மும்பையைச் சேர்ந்த கடற்படை வீரர் மதன்ராய் என்பவரின் மகள் ஜியாராய்(13). ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட இச்சிறுமி நீச்சல் பயிற்சியில் கைதேர்ந்தவர். ஏற்கெனவே பல சாதனைகளை படைத்துள்ளார்.

இந்நிலையில், ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை பாக் ஜலசந்தி கடலை நீந்தி சாதனை புரிவதற்காக ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மற்றும் பைபர் படகில் ஜியாராய், அவரது தந்தை மதன்ராய், பயிற்சியாளர் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட 10 பேர் தலைமன்னாருக்கு நேற்று முன்தினம் சென்றனர். நேற்று அதிகாலை 4.15 மணிக்கு நீந்தத் தொடங்கிய ஜியாராய் நேற்று மாலை 5.20 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியை வந்தடைந்தார்.

இவர் தலைமன்னார்- தனுஷ்கோடி இடையிலான 29 கி.மீ. தூரத்தை 13 மணி 5 நிமிடத்தில் நீந்தி கடந்துள்ளார். அரிச்சல் முனையில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, சிறுமி ஜியா ராய்க்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார்.

கடலோர பாதுகாப்புக் குழுமக் கூடுதல் டிஜிபி சின்னச்சாமி, ராமநாதபுரம் எஸ்.பி. இ.கார்த்திக், நகராட்சி துணைத் தலைவர் தெட்சிணாமூர்த்தி, மீனவர்கள், கடலோர காவல் படையினர், இந்திய கடற்படையினர் சிறுமியை வரவேற்று வாழ்த்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x