Published : 01 Apr 2016 01:10 PM
Last Updated : 01 Apr 2016 01:10 PM

திமுகவில் தேமுதிக குமரி மாவட்டச் செயலாளர்

விஜயகாந்தின் கூட்டணி முடிவுக்கு எதிர்ப்பு: மேலும் ஒருவர் வெளியேறினார்

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளராக இருந்த தினேஷ், நேற்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். திமுகவுடன் கூட்டணி அமைக்காததே தனது முடிவுக்கு காரணம் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேமுதிக அமைப்பு ரீதியாக கிழக்கு, மேற்கு என செயல்பட்டு வருகிறது. மேற்கு மாவட்டச் செயலாளராக தினேஷ் இருந்தார். சில மாதங்களுக்கு முன் மேற்கு மாவட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்ற தேமுதிக பொதுக்கூட்டத்தில் அதிகளவில் கூட்டம் கூடியது. இதனால் மாவட்டச் செயலாளர் தினேஷை, மேடையிலேயே விஜயகாந்த் பாராட்டிப் பேசினார். தலைமைக்கு விசுவாசமாக செயல்பட்ட அவர், யாரும் எதிர் பார்க்காத நிலையில் திடீரென திமுகவில் இணைந்துள்ளார்.

இதன்படி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் எஸ்.தினேஷ், கன்னியாகுமரி மாவட்ட அதிமுக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஒய்.ஜெயசிங் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.

7 வழக்குகள் உள்ளன

இதுகுறித்து தினேஷ் கூறும் போது, ‘அதிமுக ஆட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டது தேமுதிகவினர் தான். என் மீதே 7 வழக்குகள் உள்ளன. தேமுதிகவை அழிக்க நினைத்த அதிமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற திமுக கூட்டணியில் சேர்ந்திருக்க வேண்டும். அப்படி சேர்வதாக ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டு, அதிமுகவின் ‘பி’ டீமில் சேர்ந்து விட்டார் விஜயகாந்த். மேலும் விருப்ப மனு அளித்தவர்களிடம் எந்த கட்சியிலும் இல்லாத அளவுக்கு டெபாசிட் தொகை வசூல் செய்யப்பட்டது. அதிமுக எதிர்ப்பு எனும் உறுதியோடு திமுகவில் இணைந்துள்ளேன்’ என்றார் அவர்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.சுரேஷ்ராஜன், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் எஸ்.ஆஸ்டின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

உடனடியாக புதிய செயலாளர்

வட சென்னை மாவட்ட தேமுதிக செயலாளர் யுவராஜ் திமுகவில் இணைந்த செய்தி வெளியான சில மணி நேரங்களில் புதிய மாவட்டச் செயலாளராக கு.நல்லதம்பியை விஜயகாந்த் நியமனம் செய்தார். அதுபோல நேற்று கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளர் தினேஷ் திமுகவில் இணைந்த செய்தி வெளியான ஒரு மணி நேரத்தில் புதிய மாவட்டப் பொறுப்பாளராக டி.ஜெகநாதனை விஜயகாந்த் நியமனம் செய்துள் ளார்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளராக இருந்த தினேஷ், நேற்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x