

ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் 524 பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.52.40 லட்சம் கல்வி உதவித்தொகை மற்றும் 500 மகளிருக்கு தையல் இயந்திரங்களை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ நேற்று வழங்கினார்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற விழாவில், நலத்திட்ட உதவிகளை வழங்கி உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின்போது கோவையில் திமுகவை வெற்றிபெறச்செய்தால் இங்கு அடிக்கடி வருவேன் என்று தெரிவித்தேன். அப்போது கோவை மக்களை நம்ப முடியாது என்றும் தெரிவித்தேன். அதை நான் இப்போது வாபஸ் வாங்கிக்கொள்கிறேன். மாநகராட்சியில் போட்டியிட்ட 100 வார்டுகளில் 96 வார்டுகளில் திமுக கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினின் 10 மாத கால நல்லாட்சிக்கு கிடைத்த அங்கீகாரம் இது.
கோவை மாநகரில் தரமான சாலைகள் அமைக்க சிறப்பு நிதியாக முதல்வர் ரூ.200 கோடி ஒதுக்கியுள்ளார். இதுதவிர, தெருவிளக்குகள் அமைக்க ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன. அதுவும் விரைவில் நடைமுறைக்கு வரும். மின்துறையில் வரும் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வுகாண மின்னகம் எனும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்ட மக்களின் குடிநீர், மின்சாரம், கழிவுநீர் போன்ற பொதுப்பிரச்சினைகள் சார்ந்த அனைத்து கோரிக்கைகளையும் 94898 72345 என்ற எண்ணை அழைத்து தெரிவித்தால் போதும். அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசும்போது, “கோவைக்கு 2 திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்னும் ஏராளமான திட்டங்களை கோவைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்” என்றார். இந்த நிகழ்வில் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா என்கிற கிருஷ்ணன், மருதமலை சேனாதிபதி, சி.ஆர்.ராமச்சந்திரன், எஸ்.வரதராஜன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் இரா.வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.