

கிருஷ்ணகிரி மாவட்டம், கூளியம் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மனேரி, ஒம்பலக்கட்டு, சவுளூர் கிராமத்துக்கு உட்பட்ட மகாபாரத திரவுபதியம்மன் கோயிலில் 2-ம் ஆண்டு திருவிழா கடந்த 2-ம் தேதி தொடங்கியது. இதில், கடந்த 4-ம் தேதி முதல் தருமபுரி மாவட்டம் கொல்லப்பட்டி அருள்ஜோதி நாடக கலைக்குழு சார்பில், மகாபாரத நாடகம் நடைபெற்று வந்தது.
இதில், கிருஷ்ணன் பிறப்பு, திருக்கல்யாணம், பாண்டவர் பிறப்பு, பாண்டு மகாராஜன் இறப்பு, சுபத்திரை திருக்கல்யாணம், அர்சுணன் தபசு நிகழ்ச்சியும், 14-ம் தேதி மதியம் அர்சுணன் மாடு திருப்புதலை முன்னிட்டு எருது விடும் விழாவும் நடந்தது. மேலும் சித்திர சேனன் சண்டை, கிருஷ்ணன் தூது, அபிமன்னன் சண்டை நாடகம், கர்ணன் மோட்சம் ஆகிய நாடகங்கள் நடந்தது. இறுதி நாளான நேற்று பாஞ்சாலி சபதம் முடிக்கும் வகையில் துரியோதனனை படுகளம் செய்து அதன் ரத்தத்தில் கூந்தலை முடிக்கும் வைபவம் நடந்தது. தொடர்ந்து திருநங்கைகள், துடைப்பதால் அடித்து மக்களை ஆசீர்வாதம் செய்தனர். இந்நிகழ்ச்சியைக் காண சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை அம்மனேரி, ஒம்பலக்கட்டு, சவுளூர் மற்றும் கூளியம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் செய்திருந்தனர்.