Published : 21 Mar 2022 07:58 AM
Last Updated : 21 Mar 2022 07:58 AM

குற்ற சம்பவங்களை முன்னரே கண்டறிந்து எச்சரிக்கும் 7,500 இடங்களில் செயற்கை நுண்ணறிவு கேமரா: சென்னை காவல் ஆணையரகத்தில் ரூ.60 கோடியில் கட்டுப்பாட்டு அறை

சென்னை: மனிதர்களின் நடவடிக்கை, உணர்வுகளை அடிப்படையாக வைத்து, அசம்பாவிதம் நிகழ்வதற்குரிய சூழல் ஏற்பட்டால், அதை முன்னரே கண்டறிந்து எச்சரிக்கும் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் சென்னையில் 7,500 இடங்களில் பொருத்தப்பட உள்ளன.

சென்னையில் குற்றங்களை தடுக்கவும், நடந்த குற்றச் செயல்களில் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்யவும் தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

சென்னையில் ஏற்கெனவே, ‘மூன்றாவது கண்’ என்ற பெயரில் பொது இடங்களில் சுமார் 2.80 லட்சம் கண்காணிப்பு கேமராக்களை அப்போதைய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நிறுவினார். இவை பொதுமக்களுக்கு மிகுந்த நம்பிக்கை அளிப்பதோடு, 80 சதவீத வழக்குகள் துப்புதுலக்கவும் உதவி செய்து வருகின்றன.

இந்நிலையில், காவல் துறையின் அடுத்த வரவாக சென்னை முழுவதும் சுமார் 7,500 இடங்களில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

சாதாரண கண்காணிப்பு கேமராவைவிட அதிக திறன் கொண்ட ஏஎன்பிஆர் (Automatic Number-Plate Recognition Camera) கேமரா, முக அடையாளம் காணும் கேமரா ஆகியவை சென்னையின் முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக, செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் (Artificial Intelligence Camera) பொருத்தப்பட உள்ளன. சென்னை காவல் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிர்பயா நிதி ரூ.150 கோடி இதற்காக பயன்படுத்தப்பட உள்ளது. இந்த கேமராக்கள் வழக்கமான கண்காணிப்பு கேமராவைவிட பல்வேறு புதிய திறன்களும், காட்சிகளின் அடிப்படையில் எச்சரிக்கை விடுக்கும் வசதியும் கொண்டவை. இவற்றை பொருத்தினால், பொதுமக்கள், பெண்களின் பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்படும்.

இந்த கேமராக்கள் வெறும் காட்சிகளை மட்டுமல்லாது, ஒருவரது உணர்வுகளையும் அறியக்கூடிய திறன் பெற்றது. ஓரிடத்தில் குற்றச் சம்பவம் நிகழ்வதற்குரிய சூழல் ஏற்பட்டால், அதை முன்னரே கண்டறிந்து உடனடியாக எச்சரிக்கும் திறனும் உண்டு.

நிர்பயா திட்டம் மூலம் இந்த கேமராக்கள் பொருத்தப்படுவதால், பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் தொந்தரவு சம்பவங்கள் நடைபெறும் இடங்கள், பெண்கள் அதிகமாக கூடும் இடங்கள், கோயில்கள், கடற்கரைகள், பேருந்து - ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் இவற்றை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான கட்டுப்பாட்டு அறை வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ரூ.60 கோடியில் விரைவில் கட்டப்பட உள்ளது. இந்த கேமராக்களை கையாள்வது தொடர்பாக கட்டுப்பாட்டு அறை காவலர்களுக்கு பிரத்யேகமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

டெல்லி, மும்பை, லக்னோ, பெங்களூரு ஆகிய நகரங்களில் இந்த நவீன கேமராக்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கேமராக்கள் செயல்படுவது எப்படி?

செயற்கை நுண்ணறிவு கேமரா, ஒரு காட்சியை பதிவு செய்வது மட்டுமின்றி, கேமரா காட்சியில் உள்ள மனிதர்களின் நடவடிக்கையையும் கண்காணிக்கும். ஒருவரது அச்சம், கோபம், ஆத்திரம் உள்ளிட்ட உணர்வுகளையும் கண்டறியும். மனிதர்களின் நடவடிக்கை வழக்கத்துக்கு மாறாக வித்தியாசமாக தோன்றினாலோ, அவர்களது உணர்வுகளில் மாற்றம் இருந்தாலோ, அதை அடிப்படையாக வைத்து, அங்கு அசம்பாவித சம்பவம், குற்றச் செயல்கள் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளதா என்பதை கண்டறிந்து முன்கூட்டியே எச்சரிக்கும். அதற்கான தொழில்நுட்பம் இந்த கேமராவில் உள்ளது.

இதன்மூலம், கட்டுப்பாட்டு அறையில் உள்ள திரையில் உடனடியாக அந்த காட்சி ஒளிரும். இதனால், 7,500 கேமராக்களில் பதிவாகும் காட்சிகளையும் போலீஸார் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. செயற்கை நுண்ணறிவு கேமரா தேர்வு செய்து அளிக்கும் காட்சிகளை மட்டும் பார்த்தாலே போதும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x