Published : 13 Apr 2016 08:29 AM
Last Updated : 13 Apr 2016 08:29 AM

விபத்து இழப்பீடுகளில் ஊனத்தின் தன்மை குறித்து மருத்துவ ஆணையம்தான் சான்றளிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

விபத்து இழப்பீடு கோரும் வழக்குகளில் ஊனத்தின் தன்மை குறித்து உள்ளூர் மருத்துவர்களுக்குப் பதிலாக மாநில மருத்துவ ஆணையம் தான் இனி சான்றளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

விபத்து இழப்பீடு தொடர்பான ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுதாகர், நீதிபதி எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப் பித்த உத்தரவு விவரம் வருமாறு:

பொதுவாக விபத்து இழப்பீடு கோரும் வழக்குகளில், பாதிக்கப் படுபவர்கள் உள்ளூரில் உள்ள தனியார் மருத்துவர்களிடம் சட்டவிரோதமாக சான்று பெற்று சமர்ப்பிப்பதையும், அதன்பிறகு ஊனத்தின் நம்பகத்தன்மை மற்றும் பாதிப்பு தன்மை குறித்து மருத்துவ ஆணையம் அந்த அறிக்கையை மறுதலிப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

இதனால் விபத்து இழப்பீடு வழக்குகள் ஒருபுறம் அதிகளவில் தேங்கி கிடக்கின்றன. மறுபுறம் முறையீடு வழக்குகளும் அதிகரித்து வருகிறது. வழக்குகள் தேங்குவதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தப் பலனும் கிடைப்பதில்லை. எனவே இனி விபத்து வழக்குகளில் இழப்பீடு கோரி வழக்கு தொடரும் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு, மாநில மருத்துவ ஆணையமே இனி ஊனத்தின் தன்மையை ஆராய்ந்து சான்றிதழ் அளிக்க வேண்டும்.

இதன்மூலம் வழக்கை விசாரிக்கும் தீர்ப்பாயத்துக்கும் நம்பகத்தன்மை கிடைக்கும். மேலும், ஊனத்தின் தன்மை குறித்து இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும், மருத்துவர்கள், மருத்துவ ஆணையத்துக்கும் இடையே இருந்து வரும் தேவையற்ற முரண்பாடுகள் தவிர்க்கப்படும். தனியார் மருத்துவர்கள் எந்தவொரு அறிவியல்பூர்வ சோதனையும் நடத்தாமல், இஷ்டத்துக்கு சான்றிதழ் அளிப்பதால் தான் இந்த குழப்பம் ஏற்படுகிறது.

இதனால் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் இழப்பீடு கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. ஊனத்தின் தன்மை குறித்து அறிக்கை சமர்ப்பிக் கும்போது அதை பலமுறை ஆராய்ந்த சமர்ப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் பல வழக்குகளில் சுட்டிக்காட்டியுள்ளது. மத்திய அரசின் சமூகநீதித்துறையும் கடந்த 2001-ம் ஆண்டே இதுகுறித்து முறையான அறிவிப்பாணை வெளி யிட்டும், யாரும் கடைபிடிப் பதில்லை.

எனவே வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் விபத்து இழப்பீடு கோரும் வழக்குகளில் ஊனத்தின் தன்மை குறித்து இனி உள்ளூர் தனியார் மருத்துவர்களுக்குப் பதிலாக, மாநில மருத்துவ ஆணையம் தான் சான்றிதழ் அளிக்க வேண்டும் என்ற அந்த உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x