Published : 28 Apr 2016 08:46 AM
Last Updated : 28 Apr 2016 08:46 AM

நட்சத்திர தொகுதி: பாஜக தலைவர் தமிழிசை போட்டியிடும் விருகம்பாக்கம்

சென்னை விருகம்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். இதனால் இந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது. மேலும், தேமுதிக சார்பில் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரும் அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளருமான பார்த்தசாரதி போட்டியிடுகிறார். இதனால் இந்த தொகுதியில் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது.

விருகம்பாக்கம் சட்டப் பேரவைத் தொகுதி 2009-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 2011-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி, அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தனசேகரனை தோற்கடித்தார்.

தமிழகத்தில் மிகப்பெரிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்றான வில்லிவாக்கம் தொகுதியின் சில பகுதி, ஆலந்தூர் தொகுதியின் சில பகுதிகளை பிரித்து புதிதாக 2009-ம் ஆண்டு விருகம்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. இத்தொகுதியில் வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட சென்னை மாநகராட்சியின் 65 மற்றும் 128-வது வார்டுகள், ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி பகுதிகளான 129, 130 மற்றும் 131 ஆகிய வார்டுகள் உள்ளன. எம்.ஜி.ஆர்.நகர், ஜாபர்கான் பேட்டை, கோயம்பேடு மார்க்கெட் மற்றும் பேருந்து நிலையம், கே.கே.நகர், நெசப்பாக்கம் ஆகிய பகுதிகள் இந்த தொகுதியில் அமைந்துள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் பெய்த பலத்த மழை வெள்ளத்தில் இந்த தொகுதிக்குட்பட்ட பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு சரிவர வெள்ள நிவாரணம் கிடைக்கவில்லை எனவும் பரவலாக குற்றச்சாட்டு உள்ளது.

தென் சென்னை மக்களவைத் தொகுதிக்குள் விருகம்பாக்கம் தொகுதி இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தில் கோடம்பாக்கம் பகுதிக்கு அடுத்து நிறைய திரைத்துறை பிரபலங்கள் மற்றும் தொழிலாளர்கள் விருகம்பாக்கம் தொகுதிக்குள் அமைந்த பகுதியில் வசிக்கின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாஜக மாநில தலைவர் தமிழிசை ஆகியோரது இல்லங்கள் இந்த தொகுதியில் அமைந்துள்ளன. புகழ்பெற்ற ஏ.வி.எம் ஸ்டுடியோ, ஆசியாவிலேயே மிகப்பெரிய காய்கறி, கனி, பூ மார்க்கெட், மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகியவை விருகம்பாக்கம் தொகுதிக்குள் அமைந்துள்ளன.

கோயம்பேடு மார்க்கெட்டில் போதிய அடிப்படை வசதி செய்துதரப்படவில்லை. காய்கறி மார்கெட் மற்றும் பேருந்து நிலையத்துக்கு தினமும் வந்து செல்லும் வாகனங்களால் எந்நேரமும் வாகன போக்குவரத்து நெரிசல் உள்ளது. கழிவுநீர் வடிகால் பிரச்சினை உள்ளது. வாகன நெரிசலை குறைக்க, சாலைகளை அகலப்படுத்த வேண்டும் எனவும், கழிவு நீர் வடிகால் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் எனவும், காய்கறி மார்க்கெட்டில் போதிய அடிப்படை வசதி, துப்புரவுப் பணிகளை செய்து தர வேண்டும் எனவும் தொகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

2011 - தேர்தல் ஒரு பார்வை

அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இந்த தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி 71,524 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து திமுக வேட்பாளராக போட்டியிட்ட தனசேகரன் 57,430 வாக்குகள் மட்டுமே பெற்றார். சுமார் 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தேமுதிக இந்த தொகுதியில் வெற்றி பெற்றது. பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்ரீதரன் 7525 வாக்குகள் பெற்றார். மொத்தம் பதிவான வாக்குகள்-1,44,069

மொத்த வாக்காளர்கள் - 2,86,046
ஆண்கள் - 1,44,327
பெண்கள் - 1,41,652
திருநங்கைகள் - 67

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x