Published : 20 Mar 2022 12:17 PM
Last Updated : 20 Mar 2022 12:17 PM

பஞ்சாப் போல இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க ஆணையிடுங்கள்: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பஞ்சாப்பை போல இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க ஆணையிடுங்கள் என்று தமிழக அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கிஅயில், “பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பக்வந்த்சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில், இளைஞர்களுக்கு 25,000 அரசு வேலைகளை வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இளைஞர்களின் இன்றைய தலையாயத் தேவை என்ன என்பதை உணர்ந்து, அதை வழங்க பஞ்சாப் அரசு முடிவு செய்திருப்பது பாராட்டப்பட வேண்டியது என்பதில் ஐயமில்லை.

பஞ்சாப் மாநில தேர்தல் தேர்தல் பரப்புரையின் போது முதன்மையாக முன்வைக்கப்பட்ட வாக்குறுதி, படித்த இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையில் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும்; அதற்காக புதிய பணியிடங்கள் உருவாக்கப்படுவதுடன், காலியிடங்களும் நிரப்பப்படும் என்பது தான். அதை ஏற்கும் வகையில் தான் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு அம்மாநில மக்கள் வரலாறு காணாத வெற்றியை அளித்திருக்கிறார்கள். தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதல் கட்டமாக 25,000 அரசு வேலைகள் வழங்கப்படும்; அவை அனைத்தும் தகுதியின் அடிப்படையில் ஒரு பைசா கூட லஞ்சம் இல்லாமல் நிரப்பப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அறிவித்திருக்கிறார். ஒரு மாதத்தில் இதற்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, ஆள் தேர்வு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக கடந்த நவம்பர் மாதத்தில், அப்போதிருந்த காங்கிரஸ் அரசு இன்னொரு நற்பணியை செய்தது. பஞ்சாப் மாநில அரசின் பல்வேறு துறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த 36,000 ஒப்பந்த ஊழியர்களை அது பணி நிலைப்பு செய்தது.

பஞ்சாப் மாநில அரசின் இந்த நடவடிக்கைகள் துணிச்சலானவை. பஞ்சாப் அரசு வெளிப்படுத்தியிருக்கும் அதே துணிச்சலை தமிழக அரசும் வெளிப்படுத்தி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது தான் தமிழக இளைஞர்களின் எதிர்பார்ப்பு ஆகும். பஞ்சாப் மாநிலத்துடன் ஒப்பிடும் போது, தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதற்கான தேவை மிகவும் அதிகமாகவே உள்ளது. வேலை வழங்குவதற்கான வாய்ப்புகளும், வசதிகளும் பஞ்சாபை விட தமிழக அரசிடம் அதிகமாக உள்ளன. ஆட்சிக்கு வந்தால், அரசுத்துறைகளில் காலியாகவுள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும், 2 லட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக வாக்குறுதி அளித்திருந்ததால், அதை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது.

தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகை சுமார் 8 கோடி. தமிழகத்திலுள்ள அரசு, பொதுத்துறை மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களின் எண்ணிக்கை சுமார் 12 லட்சம். அதாவது சராசரியாக 66 பேருக்கு ஓர் அரசு ஊழியர் உள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகை 2.77 கோடி. அம்மாநிலத்தில் அரசு, பொதுத்துறை மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களின் எண்ணிக்கை சுமார் 6.50 லட்சம். அதாவது, 43 பேருக்கு ஓர் அரசு ஊழியர் உள்ளார். அரசு ஊழியர் விகிதம் தமிழகத்தை விட, பஞ்சாபில் 50% அதிகமாக இருக்கும் போதிலும், அங்கு புதிய அரசு ஊழியர்கள் நியமிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பு ரூ.24.84 லட்சம் கோடியாகும். பஞ்சாப் மாநில ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு ரூ.5.29 லட்சம் கோடி தான். இது தமிழகத்தின் பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே. பொருளாதாரத்தில் மராட்டியத்திற்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு இருக்கும் நிலையில், பஞ்சாப் வெகுதொலைவில் 16-ஆவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டிற்கு இன்றைய நிலையில் ரூ.5.60 லட்சம் கோடி. அதே நேரத்தில் பஞ்சாபின் கடன் சுமை ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமாகும். பொருளாதார மதிப்பின் அடிப்படையில் ஒப்பிடும் போது பஞ்சாப் மாநிலத்தின் கடன் சுமை மிகவும் அதிகம் ஆகும். இந்தக் கூறுகளை வைத்துப் பார்க்கும் போது தமிழ்நாட்டின் பொருளாதாரச் சூழலில் ஒரு லட்சம் பேருக்காவது அரசு வேலைகளை வழங்க முடியும்.

எனவே, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாட்டில் முடக்கி வைக்கப்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புதல், புதிய பணியிடங்களை உருவாக்கி நிரப்புதல் என நடப்பாண்டில் குறைந்தது ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலைகளை வழங்குவதற்கான அறிவிப்பை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பணிநிலைப்பு செய்ய வலியுறுத்தி வரும் பகுதி நேர ஆசிரியர்கள், தகுதியுள்ள கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பத்தாண்டுகளுக்கும் கூடுதலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்களையும் பணி நிலைப்பு செய்ய முதல்வர் ஆணையிட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x