

உடுமலை அருகே மலைவாழ் குழந்தைகளுக்கு சத்துணவு கிடைப்பதில்லை என்று புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக திருப்பூர்மாவட்ட ஆட்சியர் சு,வினீத்திடம், உடுமலையை அடுத்த தளி பேரூராட்சி துணைத் தலைவர் கோ.செல்வன் அளித்த மனுவில்,"எங்கள் பேரூராட்சிக்குஉட்பட்ட குருமலை செட்டில்மென்ட்டில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். வரும் கல்வியாண்டில் மேலும் 15 குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பதற்கான வயதில் உள்ளனர். ஆனால், பள்ளியில் சத்துணவு அமைப்பாளர், சமையலர் என யாரும் இல்லை. இதனால், தற்போது படிக்கும், எதிர்காலத்தில் படிக்க போகும் குழந்தைகளுக்கு சத்துணவு திட்டம்கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது.
மிக வறுமை நிலையில் வாடும் மலைவாழ் குழந்தைகளுக்கு குறுமலை செட்டில்மென்ட்டில் மையம் அமைத்து சத்துணவுவழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல அவர் அளித்த மற்றொரு மனுவில், "2006 வன உரிமை சட்டப்படி, குருமலை குடியிருப்புக்கு சாலை அமைக்க வலியுறுத்தி, 2017 ஜூலை 5-ம் தேதி நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம்.
அதன்படி, குருமலை மலைவாழ் மக்கள் காலங்காலமாக பயன்படுத்தி வந்த கருஞ்சோலை பாதையை, 2006-ம் ஆண்டு வன உரிமை சட்டப்படி, வன நிலத்தில் இருந்து ஒரு ஹெக்டேர் நிலம் ஒதுக்கி சாலை வசதி ஏற்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.