Published : 18 Apr 2016 04:15 PM
Last Updated : 18 Apr 2016 04:15 PM

விளவங்கோடு தொகுதியில் மார்க்சிஸ்ட் வெற்றி பெறுமா?- வலுவான கூட்டணி கைகொடுக்கும் என கட்சியினர் நம்பிக்கை

தேமுதிக தமாகா - மக்கள் நலக் கூட்டணியில் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் வலுவாக உள்ள மார்க்சிஸ்ட் கட்சி இம்முறை வெற்றி பெறுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மெகா கூட்டணி அமைந்துள்ளதால், இம்முறை வெற்றி உறுதி என்ற நம்பிக்கையுடன் மார்க்சிஸ்ட் கட்சியினர் களப்பணியாற்றி வருகின்றனர்.

விளவங்கோடு தொகுதி மக்களின் பிரதான தொழில்கள் ரப்பர் சாகுபடி, தேனீ வளர்ப்பு இரண்டிலுமே இப்போது ஏகப்பட்ட பிரச்னைகள் உள்ளன. மத்திய அரசு, வெளிநாடுகளில் இருந்து ரப்பரை அதிக அளவில் இறக்குமதி செய்வதால் உள்ளூரில் ரப்பருக்கு உரிய விலை கிடைக்கவில்லை.

தீர்க்கப்படாத பிரச்சினைகள்

இதேபோல் ரப்பர் விவசாயிகளின் பெரும்பாலான பட்டா நிலப்பரப்பு தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் உள்ளது.

ரப்பர் தொழிற்சாலை, ரப்பர் ஆராய்ச்சி மையம், மார்த்தாண்டத்தில் தேனீ ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை ஏற்படுத்துவது, நெய்யாறு இடதுகரை கால்வாயிலிருந்து மீண்டும் பாசனத்துக்கான தண்ணீர் கிடைக்கச் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை.

வேட்பாளர்கள்

விளவங்கோடு தொகுதியில் நாடார் சமுதாய வாக்குகள் அதிக அளவில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் நாயர் சமுதாய வாக்குகள் உள்ளன. இத்தொகுதியில் அதிமுக சார்பில் நாஞ்சில் டோம்னிக், பாஜக சார்பில் தர்மராஜ் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

திமுக கூட்டணியில் இத்தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை.

வலுவான மார்க்சிஸ்ட்

இத்தொகுதியில் கடந்த 9 சட்டப்பேரவைத் தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கட்சி 5 முறையும், காங்கிரஸ் கட்சி 4 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் சார்பில் போட்டியிட்ட ஜான் ஜோசப் வெற்றி பெற்றார். தொடர்ந்து அவர் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். 2011-ம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி வெற்றி பெற்றார். மார்க்சிஸ்ட் சார்பில் இத்தொகுதியில் போட்டியிட்ட லீமாறோஸ் தோல்வியை தழுவினர். காங்கிரஸ் சார்பில் இம்முறையும் விஜயதரணிக்குத்தான் வாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

வெற்றி கிடைக்குமா?

கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில், குமரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி திருவட்டாறு, விளவங்கோடு தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தது. அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் மார்க்சிஸ்ட் வசமே இருந்தது. பின்னர், தொகுதி மறுசீரமைப்பில் திருவட்டாறு தொகுதி நீக்கப்பட்டு விட்டது. விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வசம் ஆனது. இப்போது குமரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு மக்கள் பிரதிநிதிகள் யாரும் இல்லை. இதனால் வரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது மார்க்சிஸ்ட்.

இந்த முறை தேமுதிக, தமாகா, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 6 கட்சிகள் சேர்ந்து வலுவான கூட்டணி அமைத்துள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியினர் மிகுந்த எதிர்பார்ப்போடு களப்பணியாற்றி வருகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பு பலிக்குமா என்பது தேர்தலின் முடிவில்தான் தெரியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x