சேலம் அருகே மாணவர் தற்கொலை: ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி மறியல்

சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட மாணவர் சஞ்சய் கண்ணனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள்.
சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட மாணவர் சஞ்சய் கண்ணனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள்.
Updated on
1 min read

ஆசிரியர் கண்டித்ததால், மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

சேலம் கருப்பூர் வெள்ளக்கல்பட்டி மஞ்சுளம் பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம். இவரது மகன் சஞ்சய் கண்ணன் (15). இவர் சேலம் 4 ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 18-ம் தேதி பள்ளி முடிந்து மாலை வீட்டுக்கு வந்த சஞ்சய் கண்ணன் வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து அங்கு சென்ற கருப்பூர் போலீஸார், மாணவனின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இந்நிலையில், நேற்று காலை மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

‘பள்ளி ஆசிரியர் கண்டித்ததால், சஞ்சய் கண்ணன் தற்கொலை செய்து கொண்டதாகவும், அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் வலியுறுத்தினர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற மாநகர காவல் உதவி ஆணையர்கள் வெங்கடேசன், நாகராஜன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், சஞ்சய் கண்ணன் தற்கொலை தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in