

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் சாயமேற்றிய மீன்களை விற்பனை செய்த கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினர் அபராதம் விதித்தனர்.
தருமபுரி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் பானு சுஜாதா தலைமையிலான அதிகாரிகள் ஒகேனக்கல் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஒகேனக்கல் மீன் மார்க்கெட், நீர்வீழ்ச்சிப் பகுதி, பூங்கா பகுதி, பேருந்து நிலைய பகுதி, முதலைப் பண்ணை பகுதி உள்ளிட்ட இடங்களில் இயங்கும் மீன் இறைச்சி விற்பனை கடைகள், மீன் வருவல் விற்பனைக் கடைகள், ஓட்டல்கள், குளிர்பான கடைகள் உள்ளிட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில், செயற்கை சாயமேற்றிய மீன் இறைச்சிகள், நாள்பட்ட கெட்டுப்போன மீன் இறைச்சிகள் ஆகியவை 30 கிலோ அளவிலும், பலமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் 5 லிட்டர் அளவிலும் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல, உரிய விவரங்கள் அச்சிடப்படாத உணவுப் பொருட்கள், சிக்கன் மசாலா, காலாவதி குளிர்பானங்கள், அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் உறைகள் ஆகியவை 20 கிலோ அளவில் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்து அளிக்கப்பட்டன.
5 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் அபராதமும் விதிக்கப்பட்டது. மீன் இறைச்சிக் கடை ஒன்றில், பச்சை மீன்கள் புது மீன்கள் போல் தெரிய மீன்களின் செதில்களில் சாயமேற்றப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு அந்த மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. பொதுமக்கள் மீன் வாங்கும்போது இவற்றை கவனித்து வாங்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஆப்ரிக்கன் கெளுத்தி
இவைதவிர, ஒகேனக்கல் அடுத்த ஊட்டமலை பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி வகை மீன்கள் வளர்க்கப்படுவதாக வந்த தகவலின் பேரில் உணவுப் பாதுகாப்புத் துறையினரும், மீன் வளத்துறையினரும் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், அப்பகுதியில் உள்ள குட்டைகளில் இதர மீன் வகைகளுடன் ஆப்ரிக்கன் கெளுத்தி வகை மீன்களும் வளர்க்கப்படுவது கண்டறியப்பட்டது. ஆப்ரிக்கன் கெளுத்தி வகை மீன்களை 2 நாட்களுக்குள் அழிக்க வேண்டும். தவறினால் காவல்துறை மூலம் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.