

தமிழக பாரம்பரிய கிராமியக் கலைகளை வெளிப்படுத்தும் வகையில் ‘நம்ம ஊரு திருவிழா’ என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி சென்னை தீவுத்திடலில் நாளை மாலை நடக்க உள்ளது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ்பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில், தமிழக பாரம்பரிய கிராமியக் கலைகளை வெளிப்படுத்தும் வகையில் ஏராளமான கலைஞர்களைக் கொண்டு சென்னையில் விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், கரோனா பொது முடக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்த நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை.
இந்நிலையில், 75-வது சுதந்திரஅமுதப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழக கலை பண்பாட்டுத் துறை, சுற்றுலா துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் வரும் 21-ம் தேதி (நாளை) மாலை 6 மணிக்கு ‘நம்ம ஊரு திருவிழா’ நடைபெற உள்ளது. தமிழக கலை வடிவங்களின் சங்கமமாக இந்த நிகழ்ச்சி அமையும். இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர். தமிழக அரசு சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள நாட்டுப்புறக் கலை வடிவங்களின் 75 புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்படும்.
சென்னையை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் ‘நம்ம ஊரு திருவிழா’ நடத்துவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பில் சுற்றுலா துறை அமைச்சர் மா.மதிவேந்தன், கலை பண்பாட்டுத் துறை செயலர் பி.சந்திரமோகன், துறை இயக்குநர் சே.ரா.காந்தி, சுற்றுலா துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆகியோர் கலந்துகொண்டனர்.