Published : 20 Mar 2022 04:00 AM
Last Updated : 20 Mar 2022 04:00 AM

சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடர்பாக அதிமுக எம்எல்ஏக்களுடன் ஓபிஎஸ், இபிஎஸ் ஆலோசனை: குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்க்குரல் கொடுக்க தயாராக இருக்க அறிவுறுத்தல்

சென்னை

அதிமுக எம்எல்ஏக்களுடன் ஓபிஎஸ், இபிஎஸ் மேற்கொண்ட ஆலோசனையில், சட்டப்பேரவையில் குற்றச்சாட்டுக்கள் அதிகம்வந்தால் எதிர்க்குரல் கொடுக்கதயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் 2022-23 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்,வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மார்ச் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்களும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

இதில் நிதியமைச்சர், வேளாண்துறை அமைச்சர் ஆகியோர் பதிலுரை அளிக்கவுள்ளனர். மூன்று நாட்களும் பேரவையில் கேள்வி நேரம் இடம்பெறவுள்ளது. இந்தகூட்டத்தொடரில் அதிமுக எம்எல்ஏக்கள் எவ்வாறு செயல்படவேண்டும் என்பது குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் சென்னையில் ஆலோசனை நடைபெற்றது.

இதில், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அமைப்புச் செயலாளர்கள் மனோஜ் பாண்டியன், எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூஉள்ளிட்ட 50-க்கும் (அதிமுக எம்எல்ஏக்கள் 65) அதிகமான எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தில், பேரவை கூட்டத்தொடரில் அனைவரும் தவறாமல் பங்கேற்கவேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்பு சோதனை, ஜெயக்குமார் மீதான வழக்குகள் குறித்து கேள்வி எழுப்பவும், கோஷமிடவும் தயாராக இருக்கவேண்டும். முடிந்த அளவு அவையை சுமுகமாக நடத்தவேண்டும். ஆனால், அதிமுக மீது தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால், கடந்த முறை போன்று அமைதியாக இருக்கக் கூடாது. அவையில் துணிந்து எதிர்க்குரல் கொடுக்க தயாராக இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், பேரவையில் பேசும்உறுப்பினர்கள் நகைக் கடன் தள்ளுபடி முறையாகச் செய்யப்படவில்லை என்றும் குடும்பத் தலைவிகளுக்காக ரூ.1000 வழங்காததுஉள்ளிட்ட திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என்று அவை குறிப்பில் ஏறும் விதமாகப்பேசவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாகப் பேரவை நிகழ்ச்சிகள் நேரலைசெய்யப்படுவதால், கண்ணியமாகவும் தொகுதி நலத்திட்டங்களுக்கான நிதி குறித்தும் பேசவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாலை 5 மணி தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார்ஒன்றரை மணி நேரம் நீடித்து, மாலை 6.30 நிறைவு பெற்றது. இதனைத்தொடர்ந்து 6.35 மணிக்கு ஓபிஎஸ் கிளம்பினார். ஆனால், இபிஎஸ் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சுமார் 20 நிமிடம் தனியாக ஆலோசனை மேற்கொண்டார். கடந்தமுறை நடைபெற்ற சட்டப்பேரவைகூட்டத்தொடரில் எதிர்க்கட்சியாக அதிமுக சரியாகச் செயல்படவில்லை என்றும், பாஜகதான் நன்றாகச் செயல்பட்டதாக அக்கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியிருந்தார். அதுகுறித்து எம்எல்ஏக்கள் தலைமையிடம் கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x