Published : 10 Jun 2014 02:43 PM
Last Updated : 10 Jun 2014 02:43 PM

செம்மொழி நிறுவன விவகாரம்: கருணாநிதிக்கு அமைச்சர் கே.சி.வீரமணி பதில்

செம்மொழி நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்பாக, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட சந்தேகங்களுக்கு, தமிழக பள்ளிக் கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல், இலங்கையில் தமிழ் இனம் அழிந்தபோது, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்திய கருணாநிதி, செம்மொழி குறித்து முதலைக் கண்ணீர் வடித்து அறிக்கை விட்டிருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது.

சென்னையில் அமைந்திருக்கும் செம்மொழி நிறுவனம் ஏதோ தமிழ்நாடு அரசின் நிறுவனம் போலவும், அந்நிறுவனத்தின் ஆட்சி அதிகாரமும், மாட்சி மரபும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது போலவும், ஒரு மாயையை ஏற்படுத்தி, நெஞ்சம் மருகி, நெக்குருகி, புலம்பியிருப்பதோடு மட்டுமல்லாமல், திசை திருப்பும் நாடகத்தையும் அரங்கேற்றி இருக்கிறார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. இது குறித்த உண்மை நிலையை நான் எடுத்துரைக்க விரும்புகிறேன்.

தமிழ்நாட்டிலுள்ள மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம், முழுக்க முழுக்க மத்திய அரசின் ஆளுகைக்கும், கட்டுப்பாட்டிற்கும் உட்பட்ட நிறுவனமாகும். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி பெற்ற நிறுவனமாகும்.

இந்நிறுவனத்தின் ஆளுகைக் குழு உட்பட அனைத்து குழுக்களும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் மூலமாகவே நியமிக்கப்படுகின்றன. கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில் தன் பெயருக்கு பெருமை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அன்றைய மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரை வேண்டி, அலுவல் வழித் தலைவராக ஆளுகைக்குழுவில் இடம் பெற்றார். அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா தமிழ்நாடு முதலமைச்சராய் பொறுப்பேற்ற பிறகு ஆளுகைக் குழு கூட்டத்திற்கு நேரம் அளித்தார்.

ஆனால் அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் பொறுப்பை தட்டிக் கழித்தது மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் என்பதை கருணாநிதிக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் பற்றி கருணாநிதி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சற்றும் தொடர்பில்லாத கருத்துக்களை கூசாமல் வெளியிட்டிருக்கிறார். செம்மொழி நிறுவன அலுவலக கட்டுமானப் பணிகள் குறித்து கேள்வி எழுப்பி, கட்டடப் பணிகள் விரைவுபடுத்தப்படாமல் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

செம்மொழி நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளுக்கும் தமிழ்நாடு அரசிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இப்பணியை மத்திய அரசின் பொதுப்பணித் துறை நிறுவனம் மேற்கொண்டுள்ளதே தவிர, தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை மேற்கொள்ளவில்லை. இந்நிறுவனத்தின் கட்டுமானப் பொறுப்பை ஏற்றுள்ள மத்திய பொதுப் பணித் துறையின் மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு நுழைவாயில் மற்றும் சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகள் மட்டும் 3 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் முடிவுற்றுள்ளன. 24 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவனத்திற்கான கட்டடம் கட்ட மத்திய பொதுப்பணித்துறைக்கு ஒப்பளிக்கப்பட்டுள்ளது.

சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவராக தனக்கு பொறுப்பளிக்கப்பட்ட போதும் தனக்கு அதிகாரம் ஏதும் வழங்கப்படவில்லை என்று முனைவர் அவ்வை நடராசன் கூறியதாக கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, செம்மொழி நிறுவனத்தினுடைய அலுவல் வழித் தலைவர் என்ற போதும், செம்மொழி நிறுவனத் துணைத் தலைவர் நியமனம் குறித்து தமிழ்நாடு முதல்வர் அலுவலகத்திற்குச் எவ்விதமான அலுவலகக் குறிப்பும் தராமல் மத்திய அரசால் நியமிக்கப்பட்டார் என்பதை கருணாநிதி அறியவில்லையா?

செம்மொழி நிறுவனத்தில் ஏற்கனவே பணியாற்றுகின்ற ஆய்வு அறிஞர்களை வெளியேற்றிவிட்டு புதிதாக ஆய்வறிஞர்களை நியமனம் செய்ததைப் பற்றி கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். ஆய்வறிஞர்களை நியமிப்பதோ அல்லது அவர்களை வெளியேற்றுவதோ மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் ஆளுகைக் குழுவையுமே சாரும் என்பது கூட கருணாநிதிக்கு தெரியாதா?

பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நிறுவன நூலகம் தற்போது மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் இயங்கிக் கொண்டிருப்பதை அறிந்தும் அறியாமலும் புலம்பிக்கொண்டிருக்கிறார் கருணாநிதி.

சன் தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்து தனக்கு கிடைத்த ஒரு கோடி ரூபாய் வைப்பு தொகையை மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் வைப்புத் தொகையாக வைத்ததாகவும், அதைக் கொண்டு இதுவரை ஏன் விருது வழங்கப்படவில்லை என்றும் கருணாநிதி கேட்டிருக்கிறார்.

விருது வழங்கப்படுவதும், அதற்கு தகுதியான நபர்களை 9 பரிந்துரை செய்து, தேர்ந்தெடுப்பதும் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் ஆளுகைக்குட்பட்ட மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனமே தவிர, தமிழ்நாடு அரசு அல்ல என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

செம்மொழி என்ற சொல் ஏதோ இவரால் தான் கண்டுபிடிக்கப்பட்டது போல கதறி இருக்கிறார் கருணாநிதி. விட்டால் செம்மொழி என்ற சொல் தனக்குத்தான் சொந்தம் என்றும், வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும் காப்புரிமை வாங்கி வைத்துக் கொள்வார் போலும்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் தமிழ்மொழியை செம்மொழியென்றது இன்று நேற்றல்ல கால்டுவெல் முதல் பரிதிமாற் கலைஞர் வரை தமிழ் மொழி செம்மொழி என்று கூறியதை மறைக்க முயற்சிக்கிறார் கருணாநிதி.

செம்மொழி என்றால் அதற்கு ஆதாரம் காட்டுவது தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களே ஆகும் என்பதால்தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தியாவிலேயே முதன்முறையாக தொல்காப்பியர் ஆய்விருக்கை நிறுவியதுடன், மதுரையில் சங்கத் தமிழ் காட்சிக் கூடம் அமைத்து தமிழின் தொன்மையை உலகறிய செய்திருக்கிறார்.

எனவே தமிழுக்கும், தமிழ் நாட்டிற்கும் அல்லும் பகலும் அயராது உழைத்து, தன்னையே அன்னைத் தமிழ் நாட்டிற்காக அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

செம்மொழி என்ற பெயரில் கனிமொழியை வளர்த்த கருணாநிதிக்கு தமிழ் மொழி குறித்து பேச எவ்விதத் தகுதியும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அமைச்சர் கே.சி.வீரமணி கூறியுள்ளார்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x