Published : 20 Mar 2022 04:15 AM
Last Updated : 20 Mar 2022 04:15 AM

கல்வராயன்மலை கொட்டபுத்தூர் உண்டு உறைவிடப் பள்ளி மாணவிகளுக்கு திடீர் உடல்நலக் குறைவு: உரிய பாதுகாப்பில்லை என பெற்றோர் குற்றச்சாட்டு

கல்வராயன்மலை உண்டு உறை விடப் பள்ளியில் மாணவி ஒருவருக்கு பேய் ஓட்டுவதாக கூறி, சாமியார் ஒருவர் பூஜையில் ஈடுபடுகிறார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை கொட்டபுத்தூர் அரசு உண்டு உறைவிட மலைவாழ் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

இரு தினங்களுக்கு முன்பு இப்பள்ளியில் இருந்த 10 மாணவிகளுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அவர்கள் வழக்கம்போல் பள்ளிக்கு வந்தனர்.

அந்தப் பள்ளியில் படித்த சில மாணவிகள் ஏற்கெனவே இதுபோல் அடிக்கடி மயக்கம் அடைவதாகவும், சில மாணவிகள் தனக்குத்தானே கைகளை பிடித்துக் கொள்வதாகவும் கூறப்பட்டது.

பெற்றோரிடம் ஒருவித அச்சமான சூழல் நிலவிய நிலையில், அங்கிருந்த சிலர் அப்பகுதியைச் சேர்ந்த சாமியார் ஒருவரை நேற்று முன்தினம் இப்பள்ளிக்கு அழைத்து வந்து, மாணவிகளுக்கு தலையில் விபூதி போட்டு, பேய் ஓட்டுவதாக சில செயல்களை செய்துள்ளனர்.

இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்களிடம் கேட்ட போது, “கல்வராயன்மலையில் தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகள் அனைத்தும் விடுதிகளுடன் சேர்ந்து இயங்கு கின்றன. இந்தப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் சரியாக வரு வதில்லை.

இரவு நேரங்களில் விடுதிகளில் விடுதி காப்பாளர்கள் சரியாக தங்குவதில்லை. இதை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் விடுதியின் சுவர் ஏறி குதித்து மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். இதனால் சில மாணவிகள் பள்ளிப் படிப்பையே கைவிட்டுச் சென்றுள்ளனர்.

விடுதிகளில் ஆசிரியர்கள் தங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளுக்கு ஆசிரியர்களின் வருகை மற்றும் தரமான உணவு வழங்குதல் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற மாணவிகளுக்கு இதுவரை என்ன பிரச்சினை என்பதை தெரிவிக்கவில்லை.

ஆசிரியர்கள் செய்யும் தவறை மறைப்பதற்கு வேறு வதந்திகளை கிளப்பி விடுகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. உடனடியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயகுமாரி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா இருவரையும் தொடர்பு கொண்ட போது, அவர்கள் பேச முன்வரவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x