

விருதுநகரைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் விருட்சிக ஆசனத்தில் கியூப் செய்முறை மூலம் கின்னஸ் சாதனையில் புது முயற்சி செய்துள்ளார்.
விருதுநகர் பிபி நந்தவனம் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக்குமார். இவரது மனைவி ஜோதி. இவர்களது மகள் ஹர்ஷநிவேதா(15). விருதுநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார்.
தனது 5-வது வயது முதல் யோகா பயின்று பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். கின்னஸ் சாதனையில் புது முயற்சியாக மாணவி ஹர்ஷநிவேதா விருட்சிக ஆசனத்தில் இருந்தவாறு 17.01 வினாடிகளில் கியூப் செய்முறை மூலம் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.
தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த கின்னஸ் சாதனை முயற்சி மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மாணவியின் இச்சாதனை பதிவு செய்யப்பட்டு கின்னஸ் சாதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து மாணவி ஹர்ஷநிவேதா கூறிய தாவது:
கடந்த 2017-ம் ஆண்டில் கண்களை கட்டிக் கொண்டு 105 ஆசனங்களை செய்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை செய்துள்ளேன். அதே ஆண்டில் கண்ணாடி டம்ளர் மீது 4.54 நிமிடங்கள் நின்று கவுண்டினி ஆசனம் செய்து ஆசியா புக்ஆப் ரெக்கார்டில் இடம் பெற்றேன். மேலும் 2.54 நிமிடங்கள் உத்திர பத்மாசனம் மூலம் கடந்த 2017-ம் ஆண்டு கின்னஸ் சாதனை படைத்ததாகவும் தெரிவித்தார்.
தற்போது 2-வது முறையாக புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளதாகவும், இதற்காக தான் ஓராண்டாகப் பயிற்சி மேற்கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.