குமரியில் இரவில் குவியும் சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இரவு நேரத்தில் முழுநிலா ஒளியுடன் கடல் அழகை ரசிப்பதற்காக கடற்கரை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இரவு நேரத்தில் முழுநிலா ஒளியுடன் கடல் அழகை ரசிப்பதற்காக கடற்கரை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
Updated on
1 min read

கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளில் முழுநிலவின் ஒளியில் கடல் அழகை ரசிக்க இரவு நேரங்களிலும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

கரோனா ஊரடங்கால் இரு ஆண்டுகளாக மக்கள் நடமாட்டமின்றி குமரி சுற்றுலா மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தற்போது ஊரடங்கு தளர்வால் இரு மாதங்களாக கன்னியாகுமரி கடற்கரை, படகு இல்லம், முக்கடல் சங்கமம், மாவட்டத்தின் பிற சுற்றுலா மையங்களான திற்பரப்பு, மாத்தூர் தொட்டிப்பாலம், வட்டக்கோட்டை, உதயகிரிகோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை போன்றவற்றுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

குறிப்பாக சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் வெளிமாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்துவருகின்றனர். இதனால் இரு ஆண்டுகளாக வருவாயின்றி வெறிச்சோடிய அரசு மற்றும் தனியார் தங்கும் விடுதிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. பல்பொருள் வர்த்தக நிறுவனங்கள், சிறு கடைகள் என அனைத்தும் இயங்குவதால் பல்லாயிரக்கணக்கான வர்த்தகர்கள், சிறு வியாபாரிகள் மீண்டும் வாழ்வாதாரம் பெற்றுள்ளனர்.

கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக இரவுநேரங்களில் கன்னியாகுமரி கடற்கரை பகுதி, முக்கடல் சங்கமம் போன்றவற்றில் குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். கடலுக்குள் மின்னொளியில் ஜொலிக்கும் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசிக்கின்றனர். பவுர்ணமி மற்றும் அதைத்தொடர்ந்து சில நாட்களில் முழு நிலவின் அழகை ரசிப்பதற்காக சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் முக்கடல் சங்கமத்தில் கூடுகின்றனர். இரவு நேரத்தில் சிலநேரம் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை பின்னணியில் முழுநிலவு சிவப்பு நிறத்தில் ஜொலிப்பதை பார்த்து மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து, செல்பி எடுத்து உற்சாகமடைந்தனர்.

இரவு 10 மணிக்கு மேல் கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளில் நிற்கவேண்டாம் என போலீஸார் அங்கிருந்து செல்லுமாறு சுற்றுலா பயணிகளிடம் அறிவுறுத்துகின்றனர். கடற்கரையில் ஆர்வம் மிகுதியால் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் இரவு 10 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமம் உட்பட கடற்கரை பகுதிகளில் உலவ வேண்டாம் என தொடர்ந்து போலீஸார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in