

பல்வேறு கட்சியினரின் புகாரையடுத்து புதுச்சேரியில் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக அரசுப் பணியில் அமர்த்தப்பட்ட 2000 தற்காலிக ஊழியர்களின் நியமனத்தை தேர்தல் ஆணைய உத்தரவுப்படி ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் தற்காலிக அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டதாக கடும் குற்றச்சாட்டு எழுந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி மார்ச் மாதங்களில் 2 ஆயிரம் பேர் பல துறைகளில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.
தலைமை தேர்தல் ஆணையர் புதுச்சேரி வந்தபோது இது குறித்து எதிர்க்கட்சிகள் புகார் அளித்தன.
இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க தலைமை தேர்தல் ஆணையர் புதுச்சேரி தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் தற்காலிகமாக பல்நோக்கு பணியாளர்களாக தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக் கப்பட்ட 137 பேர் நியமனங்கள் ரத்து செய்யப்படுவதாக மருத்துவக்கல்லூரி இயக்குநர் டாக்டர் கோவிந்தராஜ் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக புதுச்சேரி தலைமைச் செயலகத்தி லுள்ள உயர் அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, "தேர்தலை யொட்டிதான் பணிக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற முடிவுக்கு தேர்தல் ஆணையம் வந்திருக்கிறது. தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 2000 பேர் பணி நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டனர்.