

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கவரப்பட்டியைச் சேர்ந்தவர் எம்.சங்கர்(32). பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர், தங்களது ஊரிலிலுள்ள அரசுப் பள்ளி அருகே சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் பள்ளி மாணவிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் காவல் துறையின் அவசர சேவை எண் 100-க்கு புகார் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலின்படி நடவடிக்கை எடுக்காமல், தகவல் தெரிவித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி சங்கரை போலீஸார் அழைத்து வந்து தாக்கியுள்ளனர். இதில், காயம் அடைந்த சங்கர் விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக திருச்சி ஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் விசாரணை நடைபெற்று வந்தது.
இதில், சங்கரை தாக்கிய காவலர்கள் செந்தில், அசோக் குமார், பிரபு ஆகிய 3 பேர் மீது 2 தினங்களுக்கு முன்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டதுடன், 3 பேரையும் எஸ்.பி நிஷா பார்த்திபன் நேற்று முன்தினம் பணியிடை நீக்கம் செய்திருந்தார். இந்நிலையில், ஐ.ஜி பரிந்துரையின் பேரில் விராலிமலை காவல் ஆய்வாளர் பத்மாவை திருச்சி சரக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி டிஐஜி சரவண சுந்தர் நேற்று உத்தரவிட்டார்.