

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா நாகையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு அக்.14 முதல் 18-ம் தேதி வரை ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற உள்ளது.
தமிழக பட்ஜெட்டில் பெண் கல்விக்கு அரசு அளிக்கும் முக்கியத்துவம் வரவேற்கத்தக்கது. பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்கள், பெண் குழந்தைகள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளது. தமிழகத்தைப் போலவே மத்திய அரசும் விவசாயத்துக்கு தனி பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்.
4 மாநில தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றாலும், மக்களின் ஆதரவை இழந்து வருகிறது. தேர்தல் வெற்றிகளுக்கு பாஜக செலவிடும் தொகை கற்பனையில் நினைத்துப் பார்க்க முடியாதது. இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டமும், விலைவாசியும் கடுமையாக உயர்ந்து வருகிறது. அரசை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் மீது பாஜக அரசு அடக்குமுறையை அவிழ்த்துவிடுகிறது.
கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்யும் ஆட்சியாக பாஜக அரசு உள்ளது. எனவே, இந்தியாவை, ஜனநாயகத்தை, அரசியல் சட்டத்தைக் காப்பாற்ற மதச்சார்பற்ற ஜனநாயக கட்சிகள் ஒன்றுகூட வேண்டும் என்றார்.
அப்போது, மாநிலச் செயலாளர் முத்தரசன், தேசியக் குழு உறுப்பினர் மகேந்திரன், மாவட்டச் செயலாளரும், எம்.பியுமான செல்வராஜ், எம்எல்ஏ சிவபுண்ணியம், முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி, ஒன்றியச் செயலாளர் பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.