

தி.மலை மாவட்டம் வந்தவாசி அடுத்த இளங்காடு கிராமத்தில் ஆற்காடு நவாப் அன்வர்தீகான் கால கல்வெட்டு கண்டெடுக்கப் பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆய்வு நடுவம் தலைவர் த.ம.பிரகாஷ் தலைமையிலான குழுவினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வந்தவாசி அடுத்த இளங்காடு கிராமத்தின் குளக்கரை அருகே தெலுங்குமொழி கல்வெட்டு கிடைத்தது. 4 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட கற்பலகை. முன்புறம் 19 வரியும், பின்புறம் 11 வரியும் இருந்தது. இக்கல்வெட்டை கல்வெட்டு ஆய்வாளர் யேசுபாபு ஆய்வு செய்தார். அதில், இக்கல்வெட்டு சக ஆண்டு 1669-ல், அதாவது பொது ஆண்டு 1749-ல் வெட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீ ராம நமஹ என ஸ்ரீ ராமர் வணக்கத்துடன் தொடங்குகிறது. கல்வெட்டில், இரண்டு இடங்களில் குளம் வெட்டிய செய்தி குறிக் கப்பட்டுள்ளது. வந்தவாசி சீர்மையை சேர்ந்த கஸ்பா இளங்காடு என்ற இடத்தில் ஒரு குளமும், பாராமகாஹானம் என்ற இடத்தில் மற்றொரு குளமும் வெட்டப்பட்டுள்ளது. குளங்களை மகாராஜா லாலா தூனிச்சந்த் மகன் லாலா முகமது காசிம், 18-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த போது வெட்டியுள்ளார்.
கஸ்பா இளங்காடு எனும் ஊர், ஹஸ்ரத் முகமது அலிகான் சாகேப் மற்றும் ஹஸ்ரத் நவாப் அன்வர்தீகான் ஆட்சி பிரிவான சபாவில் ஒரு கிராமமாக இருந்துள்ளது. 3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குளத்தில் உள்ள தண்ணீரை இன்றளவும் மக்கள் பயன்படுத்து கின்றனர்" என தெரிவித்துள்ளார்.