Published : 20 Mar 2022 04:00 AM
Last Updated : 20 Mar 2022 04:00 AM

நெமிலி பேரூராட்சியில் ரூ.75 லட்சத்தில் நகர்புற வேலைவாய்ப்பு திட்டம்: அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்

நெமிலி பேரூராட்சியில் ரூ.75 லட்சம் மதிப்பில் நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சியில் தமிழ்நாடு நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் புன்னை பொன்னியம்மன் குளம், மின்சார வாரியம் எதிரே உள்ள குட்டை மற்றும் புன்னை புதிய காலனி சாலையில் அமைந்துள்ள குட்டை ஆகியவற்றை புதிதாக அமைக்கும் பணிகளை ரூ.75 லட்சம் மதிப்பில் அமைக்கப்படவுள்ளது. இந்தப் பணிகள் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

இதில், சிறப்பு விருந்தினராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று தொடங்கி வைத்து பேசும்போது, ‘‘முன்பெல்லாம் 100 நாள் வேலை திட்டம் கிராமப்புறங்களில் மட்டும் தான் இருந்தது. ஆனால், நம்முடைய முதலமைச்சர் நகரப்பகுதியில் உள்ளவர்களுக்கும் வேலை வழங்கிட உறுதியளித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி

மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கேற்றார்போல் திட்டங்களை செயல்படுத்துகின்றனர். எங்களுக்கு வாக்காளிக்காதவர் களும் சிந்திக்கும் அளவுக்கு முதலமைச்சரின் செயல்பாடுகள் இருந்தது. இதன் காரணமாகவே உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் அமோகமாக வெற்றி பெற் றுள்ளோம்.

இன்றைக்கு வேளாண் துறைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு விவசாயிகள் பயன்பெற கூடிய அளவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை வாய்ப்பை வழங்குவது மட்டுமல்ல. நீர்நிலைகளை ஆழப்படுத்துதல் மற்றும் தூர்வாருதல் மூலம் நீராதாரங்களை பாதுகாக்க முடியும். இதுபோன்ற திட்டங்களை வேறெங்கும் பார்க்க முடியாது’’ என்றார்.

4 மாத காலத்துக்குள் முடிவு

நெமிலி பேரூராட்சியில் நடைபெறும் இந்த பணிக்காக 1,792 குடும்பங்களுக்கு மனித வேலையாட்கள் பணிக்கான அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேற்கண்ட பணிகள் 21,159 மனித வேலையாட்கள் பணியாளர்களை கொண்டு 4 மாத கால அளவில் எடுக்கப்பட்டு முடிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x