

வாலாஜா அருகே மின்சாரம் பாய்ந்து 9-ம் வகுப்பு பள்ளி மாணவி உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வாலாஜாப்பேட்டை அருகே உள்ள கடப்பேரி நாவலர் தெருவைச் சேர்ந்தவர் பழனி (52). இவரது மகள் ஷாலினி. இவர், அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியில் பழனி புதிதாக வீடு கட்டி வருகிறார்.
கட்டுமான பணியின் தண்ணீர் தேவைக்காக அந்த வீட்டின் முன்பாக தொட்டி அமைத்துள்ளனர். அங்கு நேற்று காலை சென்ற ஷாலினி தொட்டிக்கு தண்ணீரை நிரப்ப மின் மோட்டாரை இயக்கியுள்ளார். சிறிது நேரத்தில் தண்ணீர் தொட்டி நிரம்பிய நிலையில் மின் மோட்டாரை அணைக்க சென்றார்.
அப்போது தொட்டியில் அறுந்து கிடந்த மின் வயரில் இருந்து நிரம்பி வழிந்த தண்ணீர் ஷாலினி மீது பாய்ந்தது. இதில், சுருண்டு விழுந்தவரைப் பார்த்து பழனி உள்ளிட்டோர் அதிர்ச்சியடைந்தனர். அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இது குறித்து காவேரிப்பாக்கம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.