Published : 19 Mar 2022 05:56 PM
Last Updated : 19 Mar 2022 05:56 PM

கோடநாடு கொலை வழக்கில் சாட்சி விசாரணைக்கு உத்தரவிட உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: கோடநாடு கொலை வழக்கில் மேல் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதால் சாட்சி விசாரணையை நடத்துமாறு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்தத் தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் கடந்த 2017 ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம் பகதூரைக் கொலை செய்தது. பின்னர், பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றது.

இந்தக் கொள்ளை, கொலை சம்பவங்களுக்கு மூளையாகச் செயல்பட்டதாக சயான் மற்றும் கனகராஜ் ஆகியோரை போலீசார் தேடி வந்த நிலையில், கனகராஜ் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். சயான் குடும்பத்துடன் சென்ற கார் விபத்துக்குள்ளாகி அவரது மனைவி, குழந்தை பலியானார்கள். சயான் படுகாயமடைந்தார். இதையடுத்து, இந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் உள்பட 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு ஊட்டி மாவட்ட நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கில் பல சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படவில்லை. பல சாட்சிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி சயான் விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதை ஏற்றுக்கொண்ட ஊட்டி மாவட்ட நீதிமன்றம் கூடுதல் விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி அளித்தது. இந்நிலையில், வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட தீபு, ஊட்டி நீதிமன்றத்தில் சாட்சி விசாரணையை தொடங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு அரசு வழக்கறிஞர் எம்.ஷாஜகான் ஆஜராகி, இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சாட்சி விசாரணையை தொடங்கினால் வழக்கின் போக்கு மாறிவிடும். வழக்கு தொடர்பாக மேலும் பல தகவல்களும், ஆவணங்களும் திரட்டப்பட்டு வருகிறது. முக்கியமான வழக்கு என்பதால் மேல் விசாரணைக்கு பிறகே சாட்சி விசாரணையை தொடங்க முடியும். எனவே, சாட்சி விசாரணையை தொடங்க அனுமதிக்க கூடாது என்று வாதிட்டார்.

அப்போது, வழக்கறிஞர் அய்யப்பராஜ் ஆஜராகி, இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி ஆகியோரையும் சாட்சிகளாக சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதால் அவர்கள் இந்த மனுவுக்கு பதில்மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும். குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 401 (2)-ல் முன்மொழியப்பட்ட சாட்சிகளுக்கும் வாய்ப்பு தரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தற்போது இந்த வழக்கில் மேல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சாட்சி விசாரணைக்கு உத்தரவிட முடியாது. எனவே, இந்த மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x