Published : 19 Mar 2022 04:06 PM
Last Updated : 19 Mar 2022 04:06 PM

நரிக்குறவர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட விரைவு நடவடிக்கை மேற்கொள்க: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

பிரதமர் மோடி உடன் முதல்வர் ஸ்டாலின் | கோப்புப் படம்

சென்னை: தமிழகத்தில் உள்ள நரிக்குறவர் சமூகத்தினரை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட விரைவான நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: "தமிழகத்தில் நரிக்குறவர் சமூகம் என்று அழைக்கப்படும் நாடோடி பழங்குடியினரை தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தை ஈர்த்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக அரசின் பரிந்துரைகளின் அடிப்படையில், "குருவிக்காரர் குழுவினருடன் இணைந்த நரிக்குறவர்" சமூகத்தினரை, தமிழகத்தின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் திட்டத்திற்கு இந்திய தலைமைப் பதிவாளர் ஒப்புக் கொண்டுள்ளதாக, மத்தியப் பழங்குடியினர் விவகாரங்கள் துறையின் இயக்குநர் மத்திய அரசின் கடிதத்தின் மூலம் (எண் 12016/S/2011-C&LM-1, நாள் 30-4-2013) தெரிவித்திருந்ததை, பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வல்லுநர் குழுக்களான லோகூர் குழு 1965-ம் ஆண்டிலும், நாடாளுமன்றக் கூட்டுக் குழு 1967-ம் ஆண்டிலும், இந்த சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பரிந்துரைத்தன என்றும், நரிக்குறவர்கள் மிகவும் பின்தங்கிய மற்றும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய சமூகங்களில் ஒன்று என்றும், பழங்குடியினர் பட்டியலில் அவர்களைச் சேர்ப்பதன் மூலம், அவர்கள் அனைத்து அரசமைப்பு ரீதியிலான பாதுகாப்பு மற்றும் நலத் திட்டங்களைப் பெறத் தகுதியுடையவர்களாவார்கள் என்றும் தனது கடிதத்தில் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக பல கோரிக்கைகள் அளிக்கப்பட்டிருந்தும், இந்த சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, நரிக்குறவர் சமூகத்தினரை தமிழகத்திலுள்ள பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x