Published : 19 Mar 2022 02:50 PM
Last Updated : 19 Mar 2022 02:50 PM
சென்னை: தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஓரளவுக்கு ஆதரவு அளித்தாலும், விவசாயத்தையும், விவசாயிகளையும் மேம்படுத்துவதற்கு போதுமான பட்ஜெட்டாக அமையவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழக அரசின் நடப்பு (2022 23) ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் விவசாயிகளின் எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை. வேளாண் பட்ஜெட்டுக்கு ஒதுக்கிய ரூ. 33,000.68 கோடி நிதியானது விவசாயத்தின் மேம்பாட்டை கவனத்தில் கொண்டு முறையாக, முழுமையாக செலவிடப்பட வேண்டும்.தோட்டக்கலை பயிர்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க, தக்காளி சாகுபடிக்கு, இலவச மின்சாரத் திட்டத்திற்கு, கரும்பு சாகுபடி ஊக்குவிப்புக்கு, சர்க்கரை ஆலை நவீன மயமாக்கலுக்கு, எஞ்சிய நச்சு பகுப்பாய்வு ஆய்வகம், மரம் வளர்ப்பு போன்ற பலவற்றிற்கு நிதி ஒதுக்கியிருப்பது தேவையானது.
இயற்கை விவசாயம், பாரம்பரிய நெல், தார்ப்பாய் கொடுப்பது ஆகியவற்றிற்கு அளித்திருக்கும் முக்கியத்துவம் வரவேற்கத்தக்கது. இருப்பினும் தரமான தார்ப்பாயை விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும். டிஜிட்டல் விவசாயம் அறிமுகம் என்பது விவசாயிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில் எளிய முறையில் அமைய வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு மெட்ரிக் டன்னுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ. 195 வழங்கப்படும் என்பதும், பயிர்க்காப்பீடு திட்டத்திற்கு ஒதுக்கிய நிதியும் போதுமானதல்ல.
மதிப்புக்கூட்டல் மற்றும் சந்தைப்படுத்துதல் மையங்களை 38 கிராமங்களில் அமைக்க நிதி ஒதுக்குவதால் இடைத்தரகர்களுக்கு வேலையில்லாமல் நேரடியாக விவசாயிகளே பயன்பெறும் வகையில் சந்தைப்படுத்துதல் நடைபெற வேண்டும். ஒருங்கிணைந்த வேளான் வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கியிருப்பது போதுமானதல்ல. கடந்த காலங்களில் இயற்கை சீற்றத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டு, நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே.
ஆதிதிராவிட விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பை இலவசமாக வழங்க எந்தவித வைப்புத் தொகையும் செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது. திமுக தேர்தலுக்கு முன்பாக அறிவித்த விவசாயம் சார்ந்த வாக்குறுதிகள் நிறைவேறும் வகையில் வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் இடம்பெறவில்லை. தற்போதைய வேளாண் பட்ஜெட்டானது விவசாயிகளுக்கு ஓரளவுக்கு ஆதரவு அளித்தாலும், விவசாயத்தையும், விவசாயிகளையும் மேம்படுத்துவதற்கு போதுமான பட்ஜெட்டாக அமையவில்லை என்று தமாகா சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்." என்று ஜிகே வாசன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT