தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23: சிறந்த பனையேறும் இயந்திரத்துக்கு அரசு விருது

பனை மரங்கள் | கோப்புப் படம்
பனை மரங்கள் | கோப்புப் படம்
Updated on
2 min read

சென்னை: 2022-23 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் 25 லட்சம் பனை விதைகள் நடப்படும் என்று தமிழக வேளாண் பட்ஜெட் 2022-23-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பனையேறும் விருது கண்டுபிடிப்பவருக்கு அரசு விருது வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2022-23-ம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை மற்றும் உழவர்நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து, பனை மேம்பாட்டு இயக்கம் - பனை மதிப்பு கூட்டு பொருட்களுக்கு முக்கியத்துவத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள்: > பராமரிப்பின்றியும் பலன் தருபவை பனை மரங்கள். பனைமரம் விதையிட்ட நாளைத் தவிர மற்ற எந்த நாளும் கவனிக்காமல் விட்டுவிட்டாலும் தானாய் வளர்ந்து பயன்தரும் என்று நாலடியார்
குறிப்பிடுகிறது.

> தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரம் தமிழர்களின் வாழ்வோடும், மொழியோடும் இயைந்துள்ளது என்பதற்கு சங்க இலக்கியங்களே சான்றாகும். தமிழ் மொழியின் ஆரம்பகால ஊடகமாக பனை ஓலைகள் செயல்பட்டன.

> தமிழகத்தில் ஐந்து கோடி பனை மரங்கள் உள்ளன. சுமார் மூன்று லட்சம் குடும்பங்கள் பனை இலைகள், நார் ஆகியவற்றைக் கொண்டு கூடை பின்னுதல், பாய், கயிறு திரித்தல் போன்ற தொழில்களை சார்ந்தும், 11 ஆயிரம் பனைத் தொழிலாளர்கள் நுங்கு அறுவடை, பதநீர் இறக்குதல் மூலம் பனை மரங்களை வாழ்வாதாரமாகவும் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

> எனவே, பனை சாகுபடியை ஊக்குவிப்பதற்காகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், கடந்த ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் இவ்வரசினால் பனை மேம்பாட்டு இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில், பேரவைத்தலைவர் சென்ற ஆண்டில், தனது சொந்த முயற்சியினால், ஒரு லட்சம் பனை விதைகளை இலவசமாக இத்திட்ட செயல்பாட்டிற்கு வழங்கினார்கள்.

> எதிர்வரும் 2022-23 ஆம் ஆண்டிலும், இவ்வரசு 10 இலட்சம் பனை விதைகள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கும்.

>பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க, பனை மரம் ஏறும் இயந்திரங்கள், பனைவெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைத்தல், உபகரணங்கள் ஆகியவை 75 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.

> பனைவெல்லம் தயாரிக்கும் பயிற்சியும் அதற்கான உபகரணங்களும் 250 பனை விவசாயிகளுக்கு வழங்கப்படும். இது தவிர, 100 பெண்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு, பனை ஓலைப் பொருட்கள் தயாரிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். இவர்களுக்கு மூலப் பொருட்களை வழங்கி, உற்பத்தி செய்யப்படும் பனை ஓலைப் பொருட்கள் மாநில, மாவட்ட சங்கங்களினால் உருப்படி கூலி முறையில் வாங்கப்பட்டு தொடர் வேலைவாய்ப்பு வழங்கப்படும். இத்திட்டம், இரண்டு கோடியே 65 லட்சம் ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும்.

> சிறந்த பனையேறும் இயந்திரத்தைக் கண்டுபிடிப்பவர்களுக்கு விருதும் வழங்கப்படும்.

> மேலும், 2022-23 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் 25 லட்சம் பனை விதைகள் நடப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in