

தேமுதிக-மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் சிறப்பு மாநாடு செங்கல்பட்டுவை அடுத்த மாமண்டூரில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அந்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர்.
தேமுதிக-மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் சிறப்பு மாநாடு, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டுவை அடுத்த மாமண்டூரில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பாக, தேமுதிக நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘35 ஏக்கரில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களும் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. புனித ஜார்ஜ் கோட்டை வடிவில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் கூட்டணியின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறோம்’ என்றார்.