Published : 19 Mar 2022 06:58 AM
Last Updated : 19 Mar 2022 06:58 AM

புதிய வரிகள், கட்டண உயர்வு இல்லாத தமிழக பட்ஜெட் | ரூ.7,000 கோடியில் பள்ளி மேம்பாட்டு திட்டம்

தமிழக அரசின் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். முன்னதாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அமைச்சர் வாழ்த்து பெற்றார். அருகில் நிதித்துறை செயலாளர் முருகானந்தம்.

சென்னை: தமிழக அரசின் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள், கட்டண உயர்வு எதுவும் இல்லை. உயர்கல்விக்கு செல்லும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை, அரசுப் பள்ளிகளை நவீனப்படுத்த ரூ.7 ஆயிரம் கோடியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. காலை 9.58 மணிக்கு முதல்வருடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவை அரங்குக்குள் வந்தார். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனால், வழக்கமான சூட்கேஸ் இல்லாமல், கைப்பையில் கையடக்க கணினியுடன் நிதியமைச்சர் வந்தார். காலை 10 மணிக்கு பேரவைத் தலைவர் மு.அப்பாவு, திருக்குறளை வாசித்து அவை அலுவல்களை தொடங்கி வைத்தார். 10.02 மணிக்கு நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள், கட்டண உயர்வுகள் எதுவும் இல்லை.

பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை வரலாறு காணாத வேகத்தில் இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. எதிர்பாராமல் பெருமளவில் செலவினங்கள் ஏற்பட்ட போதிலும், சிறந்த நிதி நிர்வாகத்தையும் நிதி மேலாண்மையையும் அரசு கடைபிடித்தது. முதல்முறையாக இந்த ஆண்டு ரூ.7 ஆயிரம் கோடிக்குமேல் வருவாய் பற்றாக்குறை குறையும். நிதிப் பற்றாக்குறையும் 4.61 சதவீதத்தில் இருந்து 3.80 சதவீதமாக குறைய உள்ளது.

சமூகநல திட்டங்களில் எவ்வித குறையும் இல்லாமல், முன்னுரிமைகளை மறுபரிசீலனை செய்து, சமூக கட்டமைப்பு, வளர்ச்சித் திட்டங்கள் போன்றவற்றின் மீது அதிக கவனம் செலுத்தப்படும்.

ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கான காலம் ஜூன் 30-ம் தேதியுடன் முடியும் நிலையில், வரும் நிதியாண்டில் ரூ.20 ஆயிரம் கோடி நிதியிழப்பை தமிழகம் சந்திக்க நேரிடும்.

அரசின் சிறப்பான நிதி நிர்வாகத்தால், வருவாய் பற்றாக்குறை ரூ.55,272.79 கோடியாக குறையும். மாநிலத்தின் சொந்த வரிவருவாய் ரூ.1.42 லட்சம் கோடியாகவும், வரியல்லாத வருவாய் ரூ.15,537.24 கோடியாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

நிதிப் பற்றாக்குறை ரூ.90,113.71 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2022-23 நிதியாண்டில் நிகரக்கடன் ரூ.90,116.52 கோடியாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி நிலுவைக் கடன் ரூ.6.53 லட்சம் கோடியாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

* அரசு நிலங்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும், ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்பதற்கான பணிகளை மேற்கொள்ளவும் சிறப்பு நிதியாக ரூ.50 கோடி ஒதுக்கீடு.

* சென்னை மாநகரில் வெள்ளபாதிப்புகளை தடுக்கும் பணிகளுக்காக இந்த ஆண்டு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு, 21 இந்திய, உலக மொழிகளில் ரூ.5 கோடி செலவில் வெளியிடப்படும்.

* வானிலையை துல்லியமாக கணிக்க பேரிடர் எச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்தும் வகையில், புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட ஓர்கட்டமைப்பை அரசு உருவாக்கும்.

* காவல்துறைக்கு ரூ.10,285.22 கோடி ஒதுக்கீடு.

* பயிர்க்கடன், நகைக்கடன், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி திட்டங்களுக்கு ரூ.4,131 கோடி ஒதுக்கப்படும்.

* கூட்டுறவு, உணவுத்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.13,176.34 கோடி.

* டெல்டா பகுதிகளில் உள்ள கால்வாய்களை தூர்வாரும் சிறப்பு பணிகளுக்காக நீர்வளத் துறைக்கு ரூ.7,336.36 கோடி.

* சென்னைக்கு அருகில் ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா அமைக்கப்படும்.

* ரூ.190 கோடியில் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும்.

* சமூக வலைதளங்களில் தவறான பிரச்சாரங்களை தடுக்க சிறப்பு கண்காணிப்பு மையம்.

* இந்த ஆண்டில் 2,213 டீசல் பேருந்துகள், 500 மின்சார பேருந்துகள் புதிதாக வாங்கப்படும்.

கல்வி மேம்பாடு

* அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து அரசுப் பள்ளிகளையும் நவீன மயமாக்க ரூ.7 ஆயிரம் கோடியில் ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’.

* பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.36,895.89 கோடி ஒதுக்கீடு.

* தமிழ் வழிக் கல்வி வழங்கும் தனியார் பள்ளிகளில் 1 முதல்10-ம் வகுப்புவரை மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள்.

* உயர்கல்வித் துறையின்கீழ் அறிவுசார் நகரம் உருவாக்கப்படும்.

* ஐஐடி, ஐஐஎஸ், எய்ம்ஸ் ஆகியவற்றில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விச் செலவை அரசே ஏற்கும்.

* அரசுப் பள்ளிகளில் 6 முதல்12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகையாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

* ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.26,647.19 கோடி, நகராட்சி நிர்வாகத் துறைக்கு ரூ.20,400.24 கோடி ஒதுக்கீடு.

* மகளிருக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டம், நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படும்போது செயல்படுத்தப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x