Published : 19 Mar 2022 07:03 AM
Last Updated : 19 Mar 2022 07:03 AM

தமிழகத்தை வருவாய் பற்றாக்குறை இல்லாத மாநிலமாக மாற்ற இலக்கு: நிதித்துறை செயலர் நா.முருகானந்தம் தகவல்

2022-23-ம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக நிதித்துறை செயலாளர் நா.முருகானந்தம் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.படம்: ம.பிரபு

சென்னை: தமிழகத்தின் அனைத்து துறைகளுக்கும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான நிதிநிலை அறிக்கை என்றுநிதித்துறை செயலர் நா.முருகானந்தம் தெரிவித்தார்.

தமிழகத்தின் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்த நிதித்துறை செயலர் நா.முருகானந்தம், நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: இந்தாண்டு இக்கட்டான சூழலில் நிதிநிலை உள்ளது. பெருந்தொற்றின் 2, 3-வது அலைகள், வரலாறு காணாத மழை வெள்ளம் இவற்றால் செலவுகள் இருந்தாலும், இந்தாண்டு 7 ஆண்டுகளுக்குப்பின் வருவாய்ப் பற்றாக்குறை கடந்தாண்டை ஒப்பிடும் போது ரூ.7 ஆயிரம் கோடி முதல் முறையாக குறைந்துள்ளது. மாநில ஒட்டுமொத்த வளர்ச்சியில் 3 சதவீதமாக இருக்க வேண்டிய நிதி பற்றாக்குறை, கடந்தாண்டு 4.61 சதவீதமாக இருந்த நிலையில், இந்தாண்டு 3.8 சதவீதமாக குறைந்துள்ளது.

இந்த குறியீடுகள் பல்வேறு நிதி மேலாண்மை நடவடிக்கைகளால் எய்தப்பட்டுள்ளது. அடுத்தாண்டில் நிதி பற்றாக்குறையை 3.62 சதவீதமாக குறைக்க இருக்கிறோம். வரும் ஆண்டுகளில் 3 சதவீதத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்போம். வருவாய்க்கேற்பவே நாம் செலவு செய்ய வேண்டும். பற்றாக்குறை இருக்கக் கூடாது. இந்தாண்டு ரூ.55 ஆயிரம் கோடியாக இருக்கிறது. படிப்படியாக குறைத்து, பற்றாக்குறை இல்லாத நிலை எய்த வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்.

வரும் ஆண்டில், ரூ.3.33 ஆயிரம்கோடிக்கு மொத்த திட்ட செலவுகள் இருக்கும். பெருந்தொற்று குறைந்து தொழில், பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்பதால் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 17 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். மூலதன செலவும் இந்தாண்டை காட்டிலும் 13.96 சதவீதம் உயர்த்தி ரூ.43 ஆயிரம்கோடிக்கு உயர்த்தி மேற்கொள்ளப்படும்.

அனைத்து துறைகளுக்கும் பழைய, புதிய திட்டங்களுக்கு எவ்வளவு நிதி தேவையோ அதை வழங்கியுள்ளோம். பள்ளிக்கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்துக்கு 5 ஆண்டுகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளோம். 1 மாதிரிபள்ளிகள், இல்லம் தேடி கல்விதிட்டம் தொடரும். கல்லூரிகளுக்கான கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 71 ஐடிஐக்களை ரூ.2,200 கோடியில் மேம்படுத்தும் திட்டங்கள் மேற்கெள்ளப்படுகிறது. வேலைவாய்ப்புகள் அதிகரிக்க அதிகளவில் குறிப்பாக புத்தாக்க திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழக புத்தாக்க நிறுவனங்கள் உற்பத்தி பொருட்களை அரசு கெள்முதல் செய்வதற்கான திட்டம் உள்ளது.

ஏற்றுமதியை ஊக்குவிக்க ரூ.100 கோடியில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பூர் பகுதிகளில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.

கொள்கை முடிவுகள்

கட்டமைப்பு வசதிகள் அதிகமுள்ள பகுதிகளில் தளப்பரப்பு குறியீட்டை உயர்த்துவதன் மூலம்ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு வசதி செய்தல், வீட்டுவசதி வாரியகட்டிடங்களை மேம்படுத்துவதற்கான கொள்கைகள், சிறு, குறு தொழில்களுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடன் தள்ளுபடி திட்டங்களுக்கு ரூ.4,131 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டத்துக்கு ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ் வழிப்பள்ளி மாணவர்களுக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்தமாக அனைத்து துறைகளுக்கும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான நிதிநிலை அறிக்கையாகும். வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நலத்திட்டங்களுக்கு குறைபாடின்றி போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டை பொறுத்தவரை ஜனவரி முதலே மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது. வரும் ஆண்டிலும் சிறப்பாக இருக்கும் என நம்புகிறோம். குறிப்பாக, மாநிலத்தின் சொந்த வரி வருவாயும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். பல்வேறு புதிய திட்டங்கள், தொழில்நுட்பம் இவற்றின் மூலம் வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு அளித்த பதில்கள்:

ஜிஎஸ்டி இழப்பீட்டுத்தொகை எவ்வளவு வரவேண்டியுள்ளது?

கடந்தாண்டுக்கு ரூ.23 கோடி மட்டுமே நிலுவை உள்ளது. இந்தாண்டுக்கு மார்ச் இறுதி வரை ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு வர வேண்டியுள்ளது. இதை வரும் ஆண்டில் கொடுக்க வாய்ப்புள்ளது. வரும் ஜூன் மாதம் 30ம் தேதியுடன் ஜிஎஸ்டி இழப்பீட்டுத்தொகை நிறுத்தப்படும். இதன் மூலம் கிடைக்க வேண்டிய ரூ.20 ஆயிரம் கோடி நிறுத்தப்படும். ஆனால் இதை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் வருவாய் எவ்வளவு?

ஆயத்தீர்வை, மதிப்புக்கூட்டு வரி மூலம் கடந்தாண்டு ரூ.36 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டப்பட்டது. வரும் நிதியாண்டில் மேலும் ரூ.4,500 கோடி அதிகரிக்கும். கணினிமயமாக்கப்பட்டுள்ளதால், இதில் உள்ள இழப்பீடுகள் தவிர்க்கப்படும்.

மாநில அரசின் கடன் எவ்வளவு?

தற்போது மாநில அரசின் கடன் ரூ.5.7 லட்சம் கோடியாக உள்ளது. வரும் ஆண்டில் ரூ.82 ஆயிரம் கோடி கடன் வாங்க வேண்டி வரும் என்பதால், கடன் தொகை ரூ.6.5 லட்சம் கோடியாக உயர வாய்ப்புள்ளது.

கடந்தாண்டு ரூ.4.80 லட்சம்கோடியாக இருந்தது. அடுத்தாண்டுக்கு ரூ.90 ஆயிரம்கோடி இலக்கு நிர்ணயித்துள்ளோம். அவ்வளவு தேவைப்படுமா என்று பார்க்க வேண்டும். கடன் அளவு சீராகத்தான் உள்ளது.

கனிமங்கள், பெட்ரோல், டீசலில்இருந்து வரும் வருவாயைஇந்தாண்டு உயர்த்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மூலம் ரூ.23 ஆயிரம் கோடி வருவாய் வந்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x