Published : 19 Mar 2022 07:18 AM
Last Updated : 19 Mar 2022 07:18 AM
சென்னை: நிதித்துறை செயலர் நா.முருகானந்தம் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மூவலூர் ராமாமிர்தம் திருமண உதவி திட்டம், விதவை திருமண நிதியுதவி திட்டம் உள்ளிட்ட 5 வகையான திட்டங்களில், மூவலூர் ராமாமிர்தம் திட்டம் தவிர மற்ற 4 திட்டங்கள் செயல்படுத்தப்படும். அவற்றில் தங்கம் வழங்கப்படும்.
மூவலூர் ராமாமிர்தம் திருமண திட்டம் மட்டும் மாற்றியமைக் கப்படுகிறது. கல்வி தான் முக்கியம். கல்விக்குப்பின் திருமண நிதியுதவி என்பது 4, 5 ஆண்டுகளுக்குப் பின்தான்வழங்க முடிகிறது. அதுவும் ஒரு முறைதான் வழங்க முடியும். பயனாளிகள் தேர்வும் சரியானமுறையில் செய்ய முடியவில்லை. ஆனால், மாற்றப்படும் திட்டத்தின்படி நேரடியாக சரியான பயனாளியின் வங்கிக் கணக்குக்கு பணம் செல்லும்.
ரூ.1000 உதவித் தொகை
கல்வி உதவி திட்டத்தில், அரசுப்பள்ளி மாணவிகள் இளநிலை பட்டப்படிப்பில் எத்தனை ஆண்டுகள் படிக்கிறார்களோ அத்தனை ஆண்டுகளும் மாதம் ரூ.1000 வழங்கப்படும். திருமண நிதியுதவி திட்டத்தில் ஒரு லட்சம் பேருக்குதான் ஓராண்டில் நிதி கொடுக்கப்பட்டது. ஆனால், புதிய திட்டத்தில் 6 லட்சம் பேருக்கு நிதி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது கல்லூரியில் 2, 3-ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகளுக்கும் இத்திட்டம் பொருந்தும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பட்ஜெட்டில் சொல்வது என்ன?
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், 1989-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மாறிவரும் காலச்சூழலுக்கு ஏற்ப பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் உயர் கல்வியை உறுதி செய்ய இத்திட்டத்தை மாற்றியமைப்பது அவசியமாகிறது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை மிக குறைவாக இருப்பதை கருத்தில்கொண்டு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என்று மாற்றியமைக்கப்படுகிறது.
இதன்மூலம், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும்வரை மாதம் ரூ.1,000 உதவித் தொகை, அவர்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித் தொகை பெற்று வந்தாலும் இதில் கூடுதலாக உதவி பெறலாம். இந்த புதிய முன்முயற்சிக்காக ரூ.698 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு விதவையரின் மகன்களின் திருமண நிதியுதவி, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கலப்பு திருமண நிதியுதவி, அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவி, டாக்டர்தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவி ஆகிய திட்டங்கள் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்துக்கு ரூ.2,542 கோடி, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்துக்கு ரூ.1,949 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமூகநலன், மகளிர் உரிமைத் துறைக்கு ரூ.5,922.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT