

சென்னை /சிவகங்கை: தமிழக அரசின் பட்ஜெட் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றும், விமர்சித்தும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அரசியல் கட்சிதலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகள் விபரம்:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: தமிழக அரசின் பட்ஜெட் மூலம் மத்திய அரசு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையால் ரூ.20 ஆயிரம் கோடிஇழப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 15-வது நிதிக்குழு பரிந்துரையின்படி தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு ஒழுங்காக வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை நிதியமைச்சர் வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழகத்தின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு சமூகப் பார்வையோடு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதன் அடிப்படையில் தமிழக அரசின் பட்ஜெட் வளர்ச்சிக்கான பாதையில் தொடர்வதை பாராட்டுகிறேன், வரவேற்கிறேன்.
பாமக நிறுவனர் டாக்டர் ராம தாஸ்: பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு உயர்வு, அரசு பள்ளிகளின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக 5 ஆண்டுகளில் ரூ.7,000கோடியில் பேராசிரியர் அன்பழகன்பள்ளி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் பயனளிக்கக்கூடியவை ஆகும். பெண்கள் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு படிப்பதை உறுதி செய்யும் வகையில், கல்லூரிகளில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 உதவி வழங்கப்படும் என்று பாமக நிழல் பட்ஜெட்டில் அறிவித்திருந்தோம். அதே திட்டம் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையிலும் இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு நிதி மற்றும் தங்கம் வழங்கும் அந்தத் திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி: தந்தை பெரியாரின் தனித்த சிந்தனைகள், 21 உலகமொழிகளில் மொழி பெயர்ப்பதற்காக ரூ.5 கோடி ஒதுக்கியிருப்பது வரவேற்கதக்கது. மகளிர் நலன், மாணவர் நலன், கல்வித் திட்டங்கள் போன்றவற்றிற்கும் சிறப்பானவகையில் நிதி ஒதுக்கி இருக்கிறார்கள். சமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார நீதிதான் ஆட்சி முறை என்று தெளிவாக முதல்வர் சொன்னதை, இந்த பட்ஜெட் பிரதிபலிக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: தமிழக பட்ஜெட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் 18,000 வகுப்பறைகளை உருவாக்கும் அறிவிப்பு உட்பட கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கு, விவசாயம், தொழில்வளர்ச்சி மற்றும் சிறு குறு தொழில்முன்னேற்றத்திற்கு என பல முன்னெடுப்புகளை திட்டங்களாகவும், அதற்கான நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்திருப்பது தேவையானது. பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவது போன்ற அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றத்தில் ஆழ்த்துகிறது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிமாநில செயலாளர் இரா.முத்தரசன்: தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி வரும் அகழாய்வுப் பணிகளை கடல் பகுதி உள்ளிட்ட பல புதிய பகுதிகளில் விரிவுபடுத்தியிருப்பது, மாவட்டம் தோறும்புத்தகக் கண்காட்சி, ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் திறன் மேம்பாடு, சர்வதேச சதுரங்க விளையாட்டு போட்டியை நாட்டிலேயே முதன் முறையாக சென்னையில் நடத்துவது போன்ற வரவேற்கத்தக்க பல திட்டங்கள் இருக்கின்றன.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: சமூகப் பாதுகாப்பைவலுப்படுத்துதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு புதிய முதலீடுகளை ஈர்த்தல், மகளிர் மேம்பாடு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மூலம் வறுமையை ஒழித்தல், அனைத்துத் துறைகளிலும் சமூக நீதியை நிலைநாட்டுதல், தலைமுறைகளுக்கு இடையேயான சமத்துவத்தையும் உறுதி செய்தல் போன்றவற்றிற்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையில் பட்ஜெட் அறிக்கை உருவாக்கப்பட்டு இருப்பது பாராட்டுக்குரியது.
முன்னாள் மத்திய அமைச்சர்ப.சிதம்பரம்: கல்வி, சுகாதாரத்துக்குஅதிக நிதி ஒதுக்கியுள்ளது மிகுந்தமகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இரண்டும் நாட்டின் முக்கிய தேவைகள்.அவற்றுக்கு அதிக நிதி ஒதுக்கியதற்காக முதல்வர், நிதி அமைச்சரை பாராட்டுகிறேன்.
பெண் கல்வியில் அக்கறை காட்டியுள்ளனர். அரசு பள்ளியில் படிக்கும்பெண்கள் இடைநிற்றல் இல்லாமல்தொடர்ந்து பட்டம், பட்டயப்படிப்புபடிக்க மாதம் ரூ.1,000 அறிவித்தது புரட்சிகரமானது.
சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த புதிய மாவட்டத் தலைமை மருத்துவமனைகளை கட்டுவதற்கு அதிக அளவில் பணம் ஒதுக்கியதை பாராட்டுகிறேன். கல்வி, சுகாதாரம் வெறும் நல்வாழ்வு ஒதுக்கீடு என்று மட்டும் சொல்ல முடியாது. அவை இரண்டும் ஒரு வகையில் சமூக கட்டமைப்பு தான். அதனால் பல்லாயிரம் பேர் வேலைவாய்ப்பு, கல்வி, ஆரோக்கியமான வாழ்வு பெறுவர்.
உயர் கல்வி, ஆரோக்கியமான வாழ்வு பல மடங்கு பலன்களை தரும். அதேபோல் மற்ற கட்டமைப்புக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளனர். தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல் நல்வாழ்வு, வளர்ச்சி ஆகிய இரு கண்களையும் திறந்து பார்த்து அதிக நிதி ஒதுக்கியுள்ளனர்.
நிதி பற்றாக்குறை அடுத்தாண்டு 0.7 சதவீதம் குறையும் என்று கூறியுள்ளனர். இது வெற்றிகரமான நிதி மேலாண்மையைக் காட்டுகிறது. அதை பாராட்டுகிறேன்.
இதேபோல், சு.திருநாவுக்கரசர் எம்.பி, மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, சமக நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார், பாரிவேந்தர் எம்.பி, தமிழக வாழ்வுரிமை கட்சிதலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் பட்ஜெட்டை வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர்.
விமர்சித்து கருத்து
தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை: தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் மத்திய அரசின் திட்டங்களை பெயர் சூட்டி மாநில அரசு அறிவித்துள்ளது. திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தொலை நோக்கு திட்டம் எதுவும்இல்லாத ‘பகல் கனவு பட்ஜெட்டாக’அமைந்திருக்கிறது. 6 முதல் 12 ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வியினை பயிலும் போது ரூ.1000 வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர். ஆனால், இது 'பழைய ஆயிரம் ரூபாய் வாக்குறுதி போல் இல்லாமல்’ செயல்படுத்த வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: திமுகவின் தேர்தல் நேரத்து கவர்ச்சி வாக்குறுதிகளைப் பற்றி பட்ஜெட்டில் எதுவுமே பேசாமல் பூசி மெழுகியிருக்கிறார்கள். மொத்தத்தில் நேரடியாக மக்களுக்கு பயன்தரக்கூடிய திட்டங்கள் இல்லாத நிதி நிலை அறிக்கையாக தமிழக அரசின் பட்ஜெட் அமைந்துள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்ஜி.கே.வாசன்: தமிழக அரசின் பட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப முக்கிய அம்சங்கள் இடம் பெறவில்லை. இந்த பட்ஜெட்டானது அனைத்து தரப்பு மக்களுக்குமான ஒட்டு மொத்த வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக அமையவில்லை.
மக்கள் நீதி மய்யம்: தமிழக பட்ஜெட் உரையில் நிதிநிலைமை மேம்பட்டதும் மகளிர் உரிமை தொகை கொடுக்கப்படும் என்று மழுப்பலாக பேசி வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு அப்பட்டமாக மகளிரை ஏமாற்றியுள்ளது திமுக. திமுக மாறவில்லை.