மாபெரும் மாற்றத்தின் தொடக்கம் இந்த பட்ஜெட்: பழனிவேல் தியாகராஜன் பெருமிதம்

மாபெரும் மாற்றத்தின் தொடக்கம் இந்த பட்ஜெட்: பழனிவேல் தியாகராஜன் பெருமிதம்
Updated on
1 min read

சென்னை: தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று பட்ஜெட் உரையில் பேசியதாவது: பல முக்கிய வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி உள்ளது. வணிக வரி, மாநில ஆயத்தீர்வை, வாகனவரி ஆகியவை வரவு-செலவு திட்ட மதிப்பீடான ரூ.1.26 லட்சம் கோடியில், திருத்த மதிப்பீடுகளில் ரூ.1.21 லட்சம் கோடியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதிப்பற்றாக்குறை ரூ.90,113.71 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி-ல் இழப்பீட்டுத் தொகைக்குப் பதில், கடனாகப் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படும் ரூ.6,500 கோடியைக் கருத்தில் கொண்டு இது கணக்கிடப்பட்டுள்ளது.

2022-23-ம் நிதியாண்டில் நிகர கடன் ரூ.90,116.52 கோடியாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே,2023-ம் ஆண்டு மார்ச் 31-ம்தேதியன்று நிலுவைக் கடன்ரூ.6.53 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதிநிலை அறிக்கை மாபெரும் மாற்றத்தின் தொடக்கமாக அமையும். இந்த இக்கட்டான ஆண்டிலும் வருவாய்ப் பற்றாக்குறை குறைய உள்ளது,அரசின் சிறந்த நிதி நிர்வாகத்துக்கு எடுத்துக்காட்டாகும். முதலீடுகளை ஈர்க்க சாதகமான மாநிலம் தமிழகம் என்ற நிலைக்கு வலுசேர்க்கும்.

சிறந்த நிபுணர்களைக் கொண்ட முதல்வரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின்ஆலோசனைப்படி நிதிநிலையை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். வரவு-செலவு திட்டத்தை வடிவமைக்க தொடர்ந்து அறிவுரைகள் வழங்கி, முழு ஆதரவு அளித்தவர் முதல்வர் ஸ்டாலின். ‘அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க்கியல்பு’ என்ற குறளுக்கு இலக்கணமாகத் திகழும் முதல்வருக்கு நன்றி. இவ்வாறு தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in