குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுகோள்: தமிழக அரசு வலியுறுத்தவும் கல்வியாளர்கள் கோரிக்கை

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

ஈரோடு: மத்திய அரசின் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின்கீழ், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர் நிலையில் இருந்து மீட்கப்பட்டு, அவர்களுக்கு, அவர்களது வசிப்பிடங்களிலேயே, மதிய உணவு மற்றும்ஊக்கத் தொகையுடன் கல்விவழங்கப்படுகிறது. மேலும், இத்திட்டம் உள்ளூர் தொண்டு நிறுவனங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் 213 குழந்தைத் தொழிலாளர் பள்ளிகளில் 3,190 குழந்தைகள் படிக்கின்றனர். ஈரோடு மாவட்டத்தில் 15 பள்ளிகளில் 250 குழந்தைகள் பயில்கின்றனர்.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகளுக்கான நிதியைமத்திய அரசு நிறுத்தியுள்ளது.இப்பள்ளியில் குழந்தைகளுக்குவழங்கப்பட்ட ஊக்கத்தொகையும் 4 ஆண்டுகளாக வழங்கவில்லை.

தற்போது, குழந்தைத் தொழிலாளர் பள்ளிகளை மூடிவிட்டு அங்கு பயிலும் குழந்தைகளை அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளிகளில் சேர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட மலைக் கிராமங்களில் குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளிகளை நடத்தி வரும் சுடர் தொண்டுநிறுவன இயக்குநர் எஸ்.சி.நடராஜ் கூறியதாவது: கரும்பு வெட்டுதல், செங்கல் சூளை உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வந்த14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை மீட்டு, மலைக் கிராமங்களில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின்கீழ் சிறப்புப் பள்ளிகளை நடத்தி வருகிறோம். நாளுக்கு நாள் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வரும் நிலையில் மத்திய அரசு இத்திட்டத்துக்கான நிதியை குறைத்துக் கொண்டே வருகிறது.

கரோனா பெருந்தொற்று காலத்தில், கடந்த இரண்டரை ஆண்டு காலமாக அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டதால், குடும்ப வறுமை காரணமாக குழந்தைகள் பல்வேறுதொழில்களுக்கு சென்றுவிட்டனர். இதனால், குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 180 சதவீதம் உயர்ந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் குழந்தைத் தொழிலாளர்கள் பள்ளிகளை மூட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது. தமிழக முதல்வர் இப்பிரச்சினையில் தலையிட்டு, குழந்தைத் தொழிலாளர் சிறப்பு பள்ளிகள் தொடர்ந்து செயல்பட மத்திய அரசிடம் இருந்துநிதியை பெற்றுத் தர வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in