

பழநி: பழநி பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கிரி வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
பழநியில் பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 6-ம் நாளான நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடைபெற்றது. அன்று இரவு மணக்கோலத்தில் முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் வெள்ளித் தேரில் எழுந்தருளி வலம் வந்தார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக முத்துக்குமார சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
பகல் 1.30 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தேரில் எழுந்தருளினர். பின்னர் மாலை 4.45 மணிக்கு மலைக் கோயில் அடிவாரம் பாத விநாயகர் கோயில் அருகே தேரோட்டம் தொடங்கியது.
கிரி வீதிகளில் ‘அரோகரா’ கோஷம் முழங்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். மார்ச் 21-ம்தேதி கொடியிறக்கத்துடன் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவு பெறுகிறது.