

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தகவல் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு தொழிற்சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கோவை மற்றும் திருப்பூர் தொழில் வளர்ச்சி மிக்க மாவட்டங்களாக உள்ளன. இதில், கோவையில் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் வெளிமாநிலங்களில் இருந்து வந்து தங்கி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூரைப் பொறுத்தவரை பின்னலாடை உற்பத்தி துறை சார்ந்து மட்டும் சுமார் 3 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில், தமிழக அரசு நேற்று தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில், அரசின் நலத்திட்ட பயன்கள் புலம்பெயர் தொழிலாளர்களை சென்றடையவும், அவர்களுக்கு சட்ட உரிமைகள் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான நடமாடும் தகவல் மற்றும் உதவி மையங்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும், முதற்கட்டமாக கோவை, திருப்பூர் உட்பட 5 மாவட்டங்களில் இவை அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு தொழிற்சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சிஐடியு மாவட்டத் தலைவர் சி.பத்மநாபன் கூறும்போது, “புலம்பெயர் தொழிலாளர் நலனில் அக்கறை காட்டி தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்புக்குரியது. இருந்தாலும், புலம்பெயர் தொழிலாளர்கள் முழுமையாக நன்மைகளைப் பெற கடந்த 1978-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட அவர்களுக்கான சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த சட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் போக்குவரத்து செலவை தொடர்புடைய நிறுவனமே ஏற்க வேண்டும், உள்ளூர் தொழிலாளர்களைக் காட்டிலும் அரை மடங்கு கூடுதல் ஊதியம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் அந்த சட்டத்தில் உள்ளன” என்றார்.
இந்திய தொழிலாளர் சம்மேளனத்தின் (ஹெச்எம்எஸ்) மாநில செயலாளர் டி.ஹெச்.ராஜாமணி கூறும்போது, “வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் மொழி தெரியாமல் பல இடங்களில் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய சூழலில் தகவல் மற்றும் உதவி மையம் அமைக்கப்படுவது அவர்களுக்கு பயனளிக்கும்” என்றார்.