

ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத தர வேண்டும் என்பதில் பாமக உறுதியாக உள்ளது. நீதி கிடைக்கும் வரை இதற்கான சட்டப் போராட்டங்கள் தொடரும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஆந்திர மாநிலம் சேஷாச்சலம் வனப்பகுதியில் அம்மாநில சிறப்பு அதிரடிப் படையினரால் 20 தமிழர்கள் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவடைந்து விட்டது. இந்த பாவத்திற்கு காரணமான அதிகாரிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில், குடும்பத் தலைவர்களை இழந்த இருபது தமிழ்க் குடும்பங்கள் இழப்பிலிருந்து இன்னும் மீண்டு வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றன.
தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நிலவும் வறுமை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக அம்மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் ஆந்திராவுக்கு கூலி வேலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
அவ்வாறு வேலைக்கு சென்றவர்களில் 20 பேரை கடந்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி, பல ஊர்களில் பேருந்துகளிலிருந்து இறக்கி கடத்திய ஆந்திர சிறப்புக் காவல்படையினர், ரகசிய இடத்தில் விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்தி பின்னர் சுட்டுக் கொன்றனர்.
அதைத்தொடர்ந்து சேஷாச்சலம் வனப்பகுதியில் அவர்களின் உடல்களை கிடத்தி, அவர்கள் அனைவரும் செம்மரக் கடத்தல்காரர்கள் என்றும், செம்மரம் வெட்டுவதை தடுக்க முயன்றபோது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் ஆந்திரக் காவல்துறை கட்டுக்கதை எழுதியது. மிகக்கொடிய இந்த மனித உரிமை மீறல் அரங்கேற்றப்பட்டு ஓராண்டாகிவிட்ட நிலையில் இன்று வரை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கவில்லை.
ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட அனைவரும் இளம் வயதினர். அவர்களை இழந்த குடும்பத்தினர் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. குழந்தைப் பருவம் மாறாத அவர்களின் பல பிள்ளைகள் தங்களின் தந்தை இறந்து விட்டார் என்பது கூட தெரியாமல் ‘‘ஊருக்கு சென்ற தந்தை எப்போது திரும்புவார்?’’ என்று வினா எழுப்பும்போது அதை கேட்பவர் மனங்கள் கனக்கின்றன. அதேநேரத்தில் இத்தகைய நிலைக்கு காரணமான ஆந்திர காவல்துறை மீது இதுவரை நடவடிகை எடுக்கப்படவில்லை.
சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்காக பாமக தான் தொடர்ந்து போராடி வருகிறது. கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்களில் கொடுமைப்படுத்தப்பட்டதற்கான காயங்கள் இருப்பதை அறிந்த பாமக, அவர்களின் உடல்கள் மறு உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.
இதற்காக சென்னை உயர் நீதிமன்றத்திலும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து சசிக்குமார் என்பவர் உள்ளிட்ட 6 பேரின் உடல்களை உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தியது. மேலும் பாமக சார்பில் ஆந்திரா சென்ற உண்மை கண்டறியும் குழு, 20 பேரையும் ஆந்திர சிறப்புக்காவல் படையினர் தான் சுட்டுக் கொன்றதாக சேஷாச்சலம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு புகார் அளித்ததுடன், அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய ஆணையிட வேண்டும் என்று ஆந்திர உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றது.
இதையடுத்து இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் விசாரணையில் உண்மை வெளிவராது என்பதால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று பாமக சார்பில் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்து போது கூட எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
20 பேர் படுகொலை காரணமாக தேசிய மனித உரிமை ஆணையத்திடமும் பாமக புகார் அளித்தது. மனித உரிமை ஆணையத்தின் அதிகாரிகள் குழுவை தமிழகத்திற்கு அழைத்து வந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை நடத்த வைத்தது. அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 5 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்க வேண்டும்; இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற ஆணையையும் மனித உரிமை ஆணையத்திடமிருந்து பாமக பெற்றுத்தந்தது. ஆனால், இந்த உத்தரவுகள் அனைத்திற்கும் ஆந்திர அரசு உயர் நீதிமன்றத்தில் தடை வாங்கியது.
கொலையாளிகளான ஆந்திர சிறப்புக் காவல்படையினரை பாதுகாக்க ஆந்திர அரசு தீவிரமாக முயன்று வரும் நிலையில், அதற்கு தமிழக அரசும் துணை போனது தான் கொடுமை. ஆரம்பத்தில் இருந்தே கொல்லப்பட்ட தமிழர்களை செம்மரக்கடத்தல்காரர்கள் என்று முத்திரை குத்துவதில் தான் தமிழக அரசு ஆர்வம் காட்டியது.
கொல்லப்பட்டவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்ட போது, அவர்களின் உடல்களை உடனடியாக எரிக்கும்படி குடும்பத்தினரை மிரட்டியது. இந்த சிக்கலில் பாமக மேற்கொண்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டிருந்தாலோ அல்லது பாமக தொடர்ந்த வழக்கில் ஒரு தரப்பாக இணைந்துக் கொண்டிருந்தாலோ பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எப்போதோ நீதி கிடைத்திருக்கும்.
மாறாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறிய அளவில் இழப்பீடும், மாதம் ரூ.2700 ஊதியத்தில் வேலையும் கொடுத்து இந்த வழக்கில் அவர்கள் கவனம் செலுத்தாமல் தடுத்து விட்டது. தமிழக அரசின் இந்த துரோகத்தை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத தர வேண்டும் என்பதில் பாமக உறுதியாக உள்ளது. நீதி கிடைக்கும் வரை இதற்கான சட்டப் போராட்டங்கள் தொடரும். பாமக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த கோரிக்கை தமிழக அரசின் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டு உரிய நீதி பெற்றுத் தரப்படும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.