சைதாப்பேட்டையில் அதிமுக வேட்பாளர் பொன்னையன் வேட்புமனு தாக்கல்

சைதாப்பேட்டையில் அதிமுக வேட்பாளர் பொன்னையன் வேட்புமனு தாக்கல்
Updated on
1 min read

சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த தொகுதியில் வெற்றி பெற்றால், அடையாற்றில் இருபுறமும் 15 அடி தடுப்பு சுவர் கட்டப்படும் என அவர் வாக்குறுதி அளித்தார்.

அதிமுகவை சேர்ந்த மூத்த நிர்வாகியான சி.பொன்னையன் சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, கடந்த சில வாரங்களாக மாலையில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் 12.52 மணிக்கு சி.பொன்னையன், செந்தமிழன் எம்எல்ஏ, தென்சென்னை அதிமுக தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் எம்.எம்.பாபு, சைதை பகுதி செயலாளர் மோகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ராயல் ராஜா ஆகியோர் சைதாப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.

பின்னர், தேர்தல் நடத்தும் அதிகாரி பொற்கொடியிடம் அதிமுகவின் சைதை தொகுதி வேட்பாளராக சி.பொன்னையன் அறிமுகம் செய்து கொண்டு, வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரின் பெயரில் அசையும் சொத்து மதிப்பு ரூ.31 லட்சத்து 83 ஆயிரத்து 480, அவரது மனைவி பெயரில் ரூ.1 கோடியே 50 லட்சத்து 85 ஆயிரத்து 825 இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அசையா சொத்து தனது பெயரில் எதுவும் இல்லை என்றும், தனது மனைவி பெயரில் ரூ.5 கோடியே 18 லட்சத்து 54 ஆயிரத்து 250 இருப்பதாகவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

மாற்றுவேட்பாளராக செந்தமிழன் எம்எல்ஏ வேட்புமனு தாக்கல் செய்தார். மேலும், கோகுல்ராஜ் என்பவர் சுயேச்சை யாக போட்டியிட மனு தாக்கல் செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in