

அலகாபாத், டெல்லி உயர் நீதி மன்றங்களில் இருந்து மாற்றலாகி வந்துள்ள 2 நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ராஜீவ் ஷக்தேர் ஆகியோர் மாற்றலாகி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்துள்ளனர். அவர்கள் இருவரும் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். சென்னை உயர் நீதிமன்ற நூலக வளாகத்தில் நடந்த விழாவில், 2 நீதிபதிகளுக்கான பணியிட மாறுதல் உத்தரவை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் டி.ரவீந்திரன் வாசித்தார். பின்னர், 2 நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் முறைப்படி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய நீதிபதிகளை அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமயாஜி பாரம்பரிய முறைப்படி வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் டி.செல்வம், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் ஆகியோரும் வரவேற்றனர்.
நன்றி தெரிவித்து நீதிபதி ஹுலு வாடி ஜி.ரமேஷ் பேசியபோது, ‘‘பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணி யாற்றுவதில் பெருமை கொள் கிறேன். நீதித்துறையின் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தருமாறு வேண்டுகிறேன்’’ என்றார்.
நீதிபதி ராஜீவ் ஷக்தேர் பேசும் போது, ‘‘என்னைப் பற்றி இணைய தளத்தில் உள்ள தகவல்களை சேகரித்து தலைமை வழக்கறிஞர் வாழ்த்திப் பேசினார். எங்கள் குடும்பம் காஷ்மீரில் இருந்து 1947-ல் டெல்லிக்குகுடியேறியது. நாடாளுமன்றத்தில் முக்கிய அரசு செயலராக என் தந்தை பணியாற்றினார். நான் டெல்லியில் படித்து வளர்ந்தவன். என் மனை விக்கு சொந்த ஊர் மதுரை. ஆனால், அவருக்கும் தமிழ் பேசத் தெரியாது. என் சகோதரி கேரளாவில் திருமணம் செய் துள்ளார். என் குடும்பத்தில் பாதி தென் மாநிலமாக உள்ளது. இந்த உயர் நீதிமன்றத்தில் முத்துசாமி ஐயர், பாஷ்யம் ஐயங்கார் உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் வழக்கறிஞர்களாக, நீதிபதி களாகப் பணியாற்றியுள்ளனர். அப்படிப்பட்ட பெருமை மிக்க இடத்தில் நீதிபதியாக பணி யாற்றுவதில் பெருமைப்படு கிறேன்’’ என்றார்.
நீதிபதிகள் எண்ணிக்கை 42 ஆனது
குடியரசுத் தலைவர் உத்தரவின் பேரில் புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் வி.பாரதிதாசன், டி.கிருஷ்ணகுமார், எஸ்.எஸ்.சுந்தர், எம்.வி.முரளிதரன், பொன்.கலையரசன், பி.கோகுல்தாஸ் ஆகிய 6 நீதிபதிகள் கடந்த 7-ம் தேதி பொறுப்பேற்றனர். நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட 2 நீதிபதிகளுடன் சேர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.