

விடியல் கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வானும் அவரது மகன் சிராக் பாஸ்வானும் தமிழகம் வரவிருப்பதாக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நடிகர் கார்த்திக் தெரிவித்தார்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் மேலும் பேசிய அவர், ’’எங்கள் கூட்டணியின் மூத்த தலைவர் என்ற முறையில் லோக் ஜன சக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வானை சந்திக்க விடியல் கூட்டணி தலைவர்கள் புதன் கிழமை டெல்லி செல்கிறோம். பாஸ்வானுடனான சந்திப்பின் போது, தமிழகத்தில் விடியல் கூட்டணியின் தேர்தல் பணிகள் குறித்தும் தொகுதிப் பங்கீடுகள், பிரச்சார உத்திகள் குறித்தும் விரிவாகப் பேச இருக்கிறோம்.
வியாழக்கிழமையிலிருந்து நாமக-வில் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும். தமிழகத் தில் முக்கியமான ஐந்து நகரங்களில் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை நடத்த தீர்மானித்திருக்கிறோம். அதில் இரண்டு கூட்டங்களில் ராம்விலாஸ் பாஸ்வானும் அவரது மகன் சிராக் பாஸ்வானும் கலந்து கொள்கிறார்கள்.
தரமான வேட்பாளர்களைத் தான் தேர்வு செய்ய வேண்டும் என கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் கண்டிப்பாகச் சொல்லி விட்டேன். எந்தச் சூழலிலும் பின்வாங்க மாட்டேன், கட்சி மாறமாட்டேன் என வேட்பாளர் களிடம் ஒப்பந்தப் பத்திரமும் எழுதி வாங்கச் சொல்லி இருக் கிறேன்’என்றார்.
மொத்தம் 25 தொகுதிகளில் நாமக போட்டியிட தீர்மானித்திருக்கிறது. இதே எண்ணிக்கை யில் அஇ மூமுக-வும் போட்டி யிடும் எனத் தெரிகிறது.