Published : 19 Mar 2022 04:15 AM
Last Updated : 19 Mar 2022 04:15 AM

அடிக்கடி சேதமடையும் வல்லநாடு ஆற்றுப்பாலம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தல்

தூத்துக்குடி

வல்லநாடு ஆற்றுப்பாலம் அடிக்கடி சேதமடையும் நிலையில் இப்பாலம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி முறையாக செலவிடப்பட்டதா என்பதை கண்டறிய சிபிஐவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பாலத்தை முழுமையாக சீரமைக்கும் வரை சுங்க கட்டணம்வசூல் செய்வதை தடை செய்ய வேண்டும் என நுகர்வோர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

எம்பவர் இந்தியா நுகர்வோர், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவத்தின் செயல் இயக்குநரும், தூத்துக்குடி மக்களவை தொகுதி சாலைப் பாதுகாப்புக் குழு உறுப்பினருமான ஆ.சங்கர்தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு:

தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வல்லநாட்டில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள புதிய பாலம் பலமுறை சேதமடைந்து, சரி செய்யப்பட்டது. தற்போதுபாலத்தில் ஐந்தாவது முறையாக விரிசல் விழுந்துள்ளது. இப்பாலம் ரூ.324 கோடி செலவில் கட்டப்பட்டு 2012-ல் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

பாலம் கட்டி 10 ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில் 5 முறை விரிசல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அடிக்கடி பாலத்தின் இரு பகுதியும் பாதிக்கப்படுவதற்கு பாலம் சரியான முறையில் கட்டப்படாததே காரணம் என தெரிகிறது. எனவே, இந்த பாலத்துக்கென ஒதுக்கப்பட்ட தொகை முறையாக செலவழிக்கப்பட்டதா என்பதை மத்திய கணக்கு தணிக்கை குழு மூலம் ஆய்வு செய்ய வேண்டும். மேலும், இந்தப் பாலத்தை கட்டிய ஒப்பந்ததாரர்கள் மற்றும்அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உண்மையான நிலவரத்தை கண்டறிய வேண்டும்.

இந்த பாலத்தின் ஒரு பகுதி 2 ஆண்டுகளாக மூடப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் ஒரு பாலத்தின் வழியாக மட்டுமே போக்குவரத்து நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

எனவே, இந்த மேம்பாலத்தின் சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிந்து இரு வழிகளும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும் வரை தூத்துக்குடி- திருநெல்வேலி நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் வரி வசூல் செய்வதை உடனடியாக தடை செய்ய உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x