

வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தி.மலை மாவட்டம் வந்தவாசி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் இருளர், காட்டுநாயக்கன் இனத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள், வீட்டு மனைப்பட்டா மற்றும் நலவாரிய அடையாள அட்டை வழங்க வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து வருவாய் துறையிடம் மனு அளித்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதற்கு கண்டம் தெரிவித்தும், வீட்டு மனைப்பட்டா மற்றும் நலவாரிய அடையாள அட்டை வழங்கக்கோரி வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வட்டாட்சியர் அலுவலக சுற்றுச் சுவர் கதவு மூடப்பட்டு, பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் குவிக் கப்பட்டிருந்தனர்.
இதையடுத்து சங்க நிர்வாகிகள் சரவணன், மாரிமுத்து உள்ளிட்டோரிடம் வந்தவாசி வட்டாட்சியர் முருகானந்தம், காவல் துணை கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எட்டப்படாததால், காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. இதைத்தொடர்ந்து 4 பேருக்கு வீட்டு மனைப்பட்டா மற்றும் 11 பேருக்கு நலவாரிய அடையாள அட்டையை வருவாய் துறையினர் வழங்கினர். மேலும் இதர கோரிக்களை நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதி அளித்தனர்.