Published : 18 Mar 2022 07:38 PM
Last Updated : 18 Mar 2022 07:38 PM

கல்விக்கு முக்கியத்துவம் | தமிழக பட்ஜெட் 2022-ல் கவனம் ஈர்த்த அறிவிப்புகள்

சென்னை: பெரும் எதிர்பார்ப்புக்கிடையே 2022-23-ம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். "வேளாண்மையில் வளர்ச்சி, கல்வியில் தரம், தொழில்முனைவோரை ஊக்குவித்தல், மகளிர் முன்னேற்றம், விளிம்பு நிலை மக்களின் சமூக-பொருளாதார முன்னேற்றம், அனைத்துத் தளங்களிலும் சமூகநீதியை நிலைநாட்டுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி, இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது" என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.

மேலும், ”2014 ஆம் ஆண்டு முதல், வருவாய்ப் பற்றாக்குறை அச்சுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் அதிகரித்து வந்துள்ளது. முதன்முறையாக இந்த ஆண்டு இந்த நிலை மாற்றப்பட்டு, 7,000 கோடி ரூபாய்க்கும் மேல் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை குறைய உள்ளது. அத்துடன், இந்த சவாலான ஆண்டிலும் நிதிப்பற்றாக்குறை 4.61 சதவீதத்திலிருந்து 3.80 சதவீதமாக குறைய உள்ளது” என்றவர், தமிழக பட்ஜெட் 2022-23-ல் வெளியிட்ட அறிவிப்புகளில் கவனம் ஈர்த்தவை:

> தமிழ் மொழிக்கும் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்திற்கும் இடையிலான உறவை வெளிக்கொணரும் அகரமுதலி உருவாக்கும் சிறப்புத் திட்டத்திற்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு.

> பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு, 21 இந்திய, உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளாகவும் வெளியிடப்படும் பணிகள் ரூ.5 கோடியில் மேற்கொள்ளப்படும்.

> தமிழ்வழியில் மட்டும் பாடங்களைக் கற்பிக்கும் பள்ளிகளில் இலவசமாக 1 முதல் 10 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு, பாடநூல் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் இந்த ஆண்டு முதல் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

> 7 இடங்களில் அகழாய்வுப் பணிகள், 2 இடங்களில் கள ஆய்வு மற்றும் கொற்கையில் முன்கள ஆய்வுப்பணிகள் 5 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளன.

> விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அரசு அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும்.

> குற்றாலம், பூண்டி மற்றும் தருமபுரியில் உள்ள அகழ்வைப்பகங்கள் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

> மாநிலத்தில் உள்ள பழமையான பொதுக் கட்டடங்களை அவற்றின் தனித்துவம் மாறாமல் புனரமைத்து, சீரமைப்பதற்கு சிறப்பு ஒதுக்கீடாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> தமிழ் வளர்ச்சித் துறைக்கு 82.86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> நிலஅளவைப் பணிகளை மேற்கொள்ள நில அளவையர்களுக்கு “ரோவர்” (Rover Machine) கருவிகள் வழங்கும் திட்டத்திற்காக 15 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

> அரசு நிலங்களைப் பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும், ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்பதற்கான பணிகளை மேற்கொள்ளவும், சிறப்பு நிதியாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> சென்னை பெருநகரப் பகுதியில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் பணிகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> வானிலையை துல்லியமாக கணிக்கவும், பேரிடர் எச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்தும் பணிகளுக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவை ஓய்வூதியத் திட்டம், மாற்றுத்திறனாளி ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்காக 4,816 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> சமூக ஊடகங்களில் செய்யப்படும், தவறான பிரச்சாரங்களின் விளைவாக, அதிகரித்து வரும் குற்றச்செயல்களைத் தடுத்திட, “சமூக ஊடக சிறப்பு மையம்” அமைக்கப்படும்.

> தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்காக 496.52 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

> வணிக வழக்குகளை விசாரிப்பதற்கென ஏழு வணிக நீதிமன்றங்கள் அமைத்திட, இந்த நிதியாண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

> நீதி நிர்வாகத் துறைக்கென 1,461.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> பயிர்க்கடன் தள்ளுபடிக்காக 2,531 கோடி ரூபாயும், நகைக்கடன் தள்ளுபடிக்காக 1,000 கோடி ரூபாயும், சுய உதவிக் குழுக்களின் கடன்கள் தள்ளுபடிக்காக 600 கோடி ரூபாயும் என மொத்தம் 4,131 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> இந்த நிதியாண்டில், இதுவரை 14,15,916 விவசாயிகளுக்கு 9,773 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 10,76,096 குறு, சிறு விவசாயிகளுக்கு 7,428 கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களும் அடங்கும்.

> நாட்டிலேயே முதல்முறையாக கருணாநிதியால் அறிமுகப்படுத்தப்பட்ட வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> பொது விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்த வரவு செலவுத் திட்டத்தில் உணவு மானியமாக 7,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு 13,176.34 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> கால்வாய்கள், ஏரிகள், நீர்நிலைகளையும் நீர் வழித்தடங்களையும் மறுசீரமைத்தல், தடுப்பணைகள், கதவணைகள், தரைகீழ் தடுப்பணைகள் போன்ற நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணிகளுக்காக 2,787 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> 3,384 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி வடிநிலப் பகுதியில் உள்ள பாசன அமைப்புகளில் நீட்டித்தல், புனரமைத்தல், நவீனமயமாக்குதல் போன்ற பணிகள் (ERM) விரைவில் தொடங்கப்பட உள்ளன.

> 1,064 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும், பெரிய அணைகளை புனரமைக்கவும், அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்தவும் இரண்டாம் அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு (DRIP-II) திட்டத்திற்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> ஆதரவில்லாத கைவிடப்பட்ட, காயமடைந்த வளர்ப்புப் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளைப்பராமரிக்கும் அரசுசாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு உதவியளிப்பதற்கு “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்” என்னும் புதிய திட்டம் வரும் நிதியாண்டில்தொடங்கப்படும். இத்திட்டத்திற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.

> லண்டன் க்யூபூங்கா (Kew Gardens) அமைப்புடன் இணைந்து சென்னைக்கு அருகில் தாவரவியல் பூங்கா 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

> "வரையாடு பாதுகாப்புத் திட்டத்தை" அரசு செயல்படுத்துவதற்கு முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> கிண்டி குழந்தைகள் பூங்காவை மறுவடிவமைத்து, பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், விலங்குகள் உள்ளடங்கிய இயற்கைப் பூங்காவாக 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது.

> மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையேயான மோதல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள், வனத்துறையில் திறன் மேம்பாடு குறித்த கொள்கை மாற்றங்கள் ஆகியவற்றை அரசிற்குப் பரிந்துரைக்க வன ஆணையம் ஒன்றை அரசு அமைக்கும்.

> வரும் நிதியாண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படவுள்ள இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்காக, 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> 15 மாவட்டங்களில் முன்மாதிரிப்பள்ளிகளை (Model Schools) தொடங்கும் திட்டத்திற்காக 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’ என்ற மாபெரும் திட்டத்தை அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தி, தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 18,000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளும் (smart classrooms), இதரப் பள்ளிகளில் அதிநவீன கணினி ஆய்வகங்களும் உருவாக்கப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில், இத்திட்டங்கள்படிப்படியாக 7,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். வரும் நிதியாண்டில் 1,300 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

> புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்களில்,36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் உயர்தர வசதிகளுடன்கூடிய மாவட்ட மத்திய நூலகங்கள் அரசால் ஏற்படுத்தப்படும். இந்நூலகக் கட்டடங்களுக்கு தமிழ் அறிஞர்களின் பெயர்கள் சூட்டப்படும்.

> இலக்கியச் செழுமை மிக்க தமிழ்மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில், ஆண்டுக்கு நான்கு இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும். புத்தகக்காட்சிகள் மற்றும் இலக்கியத் திருவிழாக்கள் வரும் ஆண்டில் 5.6 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்.

> உலகளாவியபங்களிப்புடன், “அறிவு சார் நகரம்” (Knowledge City) ஒன்று உருவாக்கப்படும். இந்த அறிவு சார் நகரம், உலகளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் கிளைகளைக் கொண்டிருக்கும்.

> தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO), தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (SIPCOT), தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (TANSIDCO) போன்ற அரசுபொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்கள் தங்களின் வளாகங்களில் ஆராய்ச்சிப் பூங்காக்களை நிறுவ ஊக்குவிக்கப்படும்.

> அரசுக் கல்லூரிகள் மற்றும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய் செலவில் ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்கி, புதிய வகுப்பறைகள், விடுதிகள், ஆய்வகங்கள், திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கப்படும். இதற்காக, இவ்வாண்டு 250 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

> முன்னுரிமை அடிப்படையில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் பல்வேறு கட்டணங்களுக்காக 204 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> தொழில் நிறுவனங்களின் திறன் தேவைக்கேற்ப மாணவர்களுக்கு சிறப்புத் திறன்பயிற்சிகள் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த, 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> தமிழகத்திலிருந்து உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களையும் ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களையும் உருவாக்க, தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்கத் தேடல் திட்டத்தைச் செயல்படுத்திட25 கோடி ரூபாய் வழங்கப்படும்.

> வடசென்னையில் இளைஞர்களின் திறனை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், சிறந்த விளையாட்டு வசதிகள் மற்றும் கட்டமைப்புகளுடன் கூடிய விளையாட்டு வளாகம் ஒன்றை அரசு உருவாக்கும். சென்னை ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் செலவில் இவ்வளாகம் அமைக்கப்படும்.

> புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்கள் உள்ளிட்ட 19 மாவட்டங்களிலுள்ள அரசு மருத்துவமனைகள் 1,019 கோடி ரூபாய் செலவில் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்.

> கீழ்ப்பாக்கத்திலுள்ள மனநல மருத்துவமனையை (IMH),தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (TNIMHANS) என்ற உயர்நிலை அமைப்பாக மேம்படுத்திட அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு, முதல் கட்டமாக 40 கோடி ரூபாய் வழங்கப்படும்.

> காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசுஅறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம், 750 படுக்கை வசதிகளுடைய, தன்னாட்சி அதிகாரம் பெற்ற உயர்தர மருத்துவமனையாக மேலும் தரம் உயர்த்தப்படும். இப்பணிகள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உலக வங்கி மற்றும் தேசியசுகாதார இயக்க நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.

> உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களுக்கு மத்திய அரசு வகுக்கும் வழிமுறைகளின் அடிப்படையில் அவர்களது எதிர்கால மருத்துவக் கல்விக்கான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கும்.

> தேசிய ஊரக சுகாதார இயக்கத் திட்டத்திற்கு 1,906 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> அவசர ஊர்தி சேவைகளுக்கு 304 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

> டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்திற்கு 817 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு 1,547 கோடி ரூபாய் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு , பட்டயப்படிப்பு , தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும்.

> செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையம்” அமைக்கப்படும்.

> ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்திற்கு 2,542 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்திற்கு 1,949 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரால் தொடங்கப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்திற்கு (TANSIM) 30 கோடி ரூபாய் நிதியாக வழங்கப்படும்.

> விளிம்பு நிலையில் இருக்கும் இருளர்கள் போன்ற பண்டைய பழங்குடியினருக்கு (Particularly Vulnerable Tribal Groups)இந்த ஆண்டு 20.7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 443 வீடுகள் கட்டுவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. வரும் நிதியாண்டில் மேலும்,1000 புதிய வீடுகள் பண்டைய பழங்குடியினருக்கு 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும்.

> ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி உதவித் தொகைக்காக 1,963 கோடி ரூபாயும், உணவுக் கட்டணத்திற்கு 512 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி உதவித்தொகைக்காக 322 கோடி ரூபாயும், மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்குவதற்காக 162 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மையினர் வழிபாட்டுத் தலங்களான தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்காக்களைப் பழுதுபார்ப்பதற்காகவும், புனரமைப்பதற்காகவும் வரும் நிதியாண்டில் 12 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

> தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் உடற்பயிற்சி பயிற்றுநர் மற்றும் சிறப்பு கல்வியாளர்களுக்கு வழங்கப்படும் மாத மதிப்பூதியம் 14,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

> கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்புத் தொகைக்காக 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், 2021-22 ஆம் ஆண்டில் 2,30,788புதிய வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக, 4,848 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்– II வரும் ஆண்டில், 1,455 கோடி ரூபாய் செலவில் 2,657 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

> கடந்த பத்தாண்டுகளாக பராமரிப்பு இன்றி புறக்கணிக்கப்பட்ட149 சமத்துவபுரங்கள் 190 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும்.

> பிரதமரின் கிராம சாலைத்திட்டம் III-ன் கீழ், 1,280 கி.மீ. நீளமுள்ள 280 சாலைகளை791 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், 54 பாலங்களை221 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் அமைப்பதற்கான பணிகள் வரும் ஆண்டில் மேற்கொள்ளப்படும்.

> மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு 2,800 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்கு 705 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்திற்கு 636 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> திடக்கழிவு மேலாண்மை உட்பட, முழுமையான சுகாதாரத்தை உறுதி செய்வதற்கான, இரண்டாவது தூய்மை இந்தியா இயக்கம், மத்திய அரசின் நிதி உதவியுடன் அரசால் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கான மாநிலப் பங்கீடாக 2,169 கோடி ரூபாயுடன் மொத்தமாக 5,465 கோடி ரூபாய் ஒப்பளிக்கப்பட்டுள்ளது.

> கொடுங்கையூரில் பல ஆண்டுகளாகத் தேங்கியுள்ள குப்பைகளை பிரித்து அகற்றும் பணிகள் ‘Bio-mining’ முறையில் வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும்.

> அம்ருத் திட்டத்திற்கு 2,130 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட தாம்பரம், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய ஆறு மாநகராட்சிகளில் அடிப்படைக் கட்டமைப்பைஉருவாக்குவதற்கு, தலா 10 கோடி ரூபாய் என மொத்தம் 60 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்படும்.

> புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 28 நகராட்சிகளுக்கு தலா 2 கோடி ரூபாய் என மொத்தம் 56 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்படும்.

> 200 ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேய அதிகாரியால் முதன்முதலாகக் கண்டறியப்பட்டு கட்டமைக்கப்பட்டதே இன்றைய நீலகிரி மாவட்டத்தின் தலைமையிடமான உதகை நகரமாகும். இதனை நினைவுகூறும் வகையில் சிறப்புத் திட்டங்களும் நிகழ்ச்சிகளும் மேற்கொள்ள 10 கோடி ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படுகிறது.

> நகர்ப்புறப் பகுதிகளைப் பசுமையாக்கி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு 500 பூங்காக்கள் உருவாக்கப்படும்.

> நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு 500 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

> திறன்மிகு நகரங்கள் திட்டத்திற்கு1,875 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> 2,208 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் 5.64 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 6 புதிய கூட்டுகுடிநீர் திட்டங்கள் வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்படும்.

> குடியிருப்புக்கு குடிநீர் (ஜல்ஜீவன்) திட்டத்திற்காக 3,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> மீஞ்சூரில் இருந்து வண்டலூர் வரை 62 கிலோமீட்டர் நீளமுள்ள வெளிவட்டச் சாலையின் (ORR) கிழக்குப் பகுதியில் 50 மீட்டர் அகலமுள்ள நிலம், வளர்ச்சிப் பெருவழியாக (Development Corridor)மேம்படுத்தப்படும்.

> பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்திற்காக (நகர்ப்புறம்) 3,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x