தமிழக பட்ஜெட் 2022-23: ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு ரூ. 2,800 கோடி ஒதுக்கீடு

தமிழக பட்ஜெட் 2022-23: ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு ரூ. 2,800 கோடி ஒதுக்கீடு
Updated on
2 min read

சென்னை: பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் 2021-22 ஆம் ஆண்டில் 2,30,788 புதிய வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக,4,848 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு 2,800 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழக பட்ஜெட் 2022-23-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-23-ம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள்: > சிறப்புத் தேவையுள்ள ஒவ்வொரு குழந்தையும் நன்கு வளர்வதற்கான வாய்ப்புகளை உறுதி செய்வதற்கு, ஆரம்பக் கட்டத்திலேயே குறைபாட்டைக் கண்டறிந்து சிகிச்சை வழங்குவது இன்றியமையாததாகும். தற்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை, பள்ளிக்கல்வித் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ஆகிய துறைகள் இப்பணிகளைத் தனித்தனியாகச் செய்கின்றன. இத்துறைகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, தகவல் பரிமாற்றத்திற்கு வழிவகை செய்து, பல்வேறு வகையான சிகிச்சை மையங்கள் மூலம் சிறப்புத் தேவைகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு அனைத்து சேவைகளையும் வழங்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

> தரமான ஆரம்ப நிலை பயிற்சி மற்றும் கல்வியை வழங்குவதற்காக, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி நிறுவனங்களுக்கு அரசு சம்பள மானியம் வழங்கி வருகிறது. இந்நிறுவனங்களில் பணியாற்றும் உடற்பயிற்சி பயிற்றுநர் மற்றும் சிறப்பு கல்வியாளர்களுக்கு வழங்கப்படும் மாத மதிப்பூதியம் 14,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

> கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்புத் தொகைக்காக 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இம்மதிப்பீடுகளில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கு 838.01 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், 2016-2020 ஆம் ஆண்டுகளில் ஒப்பளிக்கப்பட்ட 1,77,922 வீடுகளின் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்திட, மேற்கூரை அமைப்பதற்காக கூடுதலாக வழங்கப்படும் 70,000 ரூபாய் உட்பட ஆண்டுதோறும் வீடு ஒன்றிற்கு மொத்தம் 1,68,000 ரூபாய் மாநில அரசு வழங்கி வருகிறது. 2021-22 ஆம் ஆண்டில் 2,30,788 புதிய வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக, 4,848 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

> கட்டமைப்புப் பற்றாக்குறையை நிறைவு செய்து,கிராமங்களை பன்முக வளர்ச்சியடையச் செய்வது,அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்– II ன் குறிக்கோளாகும். வரும் ஆண்டில், 1,455 கோடி ரூபாய் செலவில் 2,657 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். அரசின் முன்னோடித் திட்டமான கருணாநிதியின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களை ஒருங்கிணைத்து இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

> சமத்துவம் தழைக்கும் ஏற்றத்தாழ்வுகளற்ற தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில், முன்னாள் முதல்வர் கருணாநிதியால் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டன. முதற்கட்டமாக, கடந்த பத்தாண்டுகளாக பராமரிப்பு இன்றி புறக்கணிக்கப்பட்ட 149 சமத்துவபுரங்கள் 190 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும்.

> பிரதமரின் கிராம சாலைத்திட்டம் III-ன் கீழ், 1,280 கி.மீ. நீளமுள்ள 280 சாலைகளை 791 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், 54 பாலங்களை 221 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் அமைப்பதற்கான பணிகள் வரும் ஆண்டில் மேற்கொள்ளப்படும்.

> மகளிர் சுய உதவிக்குழுக்களை தற்காலத்திய தொழில்நுட்ப பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்ப, திறன்மிகு சுயஉதவிக்குழுக்களாக (Smart SHG) மேம்படுத்த முன்னோடி பயிற்சித் திட்டமாக (pilot training basis) மதுரையில் தொடங்கப்படும். தமது முன்னேற்றத்துடன் தாம் சார்ந்துள்ள சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும் அவர்கள் பங்காற்றும் வகையில் சுய உதவிக் குழுக்களை மெருகேற்றிட பயிற்சி வழங்கப்படும்.

> மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு 2,800 கோடி ரூபாயும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்கு 705 கோடி ரூபாயும், தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்திற்கு 636 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இம்மதிப்பீடுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 26,647.19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in