Published : 18 Mar 2022 12:51 PM
Last Updated : 18 Mar 2022 12:51 PM

வருவாய் உயர்ந்தும், அதிக கடன் வாங்குவது திமுக அரசின் செயலின்மையைக் காட்டுகிறது: இபிஎஸ் விமர்சனம்

சென்னை: ’திமுக அட்சியில் வருவாய் அதிகரித்தாலும், அதிக கடன் வாங்கியுள்ளனர்; கல்வி கடன் தள்ளுபடி பற்றி பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை’ என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

2022-23-ம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதேவேளையில், தமிழக சட்டப்பேரவையில் பேச அனுமதி கேட்டு அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கூட்டாக அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்புக்கு பின் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களிடம் பேசியது: “2021-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியைவிட்டு செல்லும்போது தமிழகத்துக்கு சுமார் 4.8 லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்தது. மூலதன செலவுகளுக்காகவே அதிமுக அரசில் கடன் வாங்கப்பட்டது. 2021 - 2022 திமுக ஆட்சியில் ரூ.1.08 லட்சம் கோடி கடனாக வாங்கப்பட்டுள்ளது. வாங்கிய கடனுக்கு இதுவரை எந்த முக்கியமான திட்டமும் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. நிறைவேற்றப்பட்டதாக எங்களுக்குத் தெரியவும் இல்லை.

இதில், 2022 - 2023-ஆம் ஆண்டுக்கு 1.20 லட்சம் கோடி ரூபாய் கடன் பெறபோவதாக அறிவித்திருக்கிறார்கள். ஆக, மொத்தம் இரண்டு ஆண்டுகளில் திமுக அரசு 2.28 லட்சம் கோடி கடன் பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் 4.8 லட்சம் கோடி ரூபாய்தான் கடன் இருந்தது.

கரோனா தொற்று இருந்ததால் அதிமுக ஆட்சியில் வருவாய் குறைந்தது. எந்தவிதத்திலும் அரசுக்கு வருவாய் கிடைக்கவில்லை. கரோனா காரணமாக அதிமுக ஆட்சியில் வரவு குறைந்து, செலவு அதிகமாக இருந்தது. ஆனால், திமுக ஆட்சியின்போது தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது. போக்குவரத்து, பத்திரப் பதிவில் திமுகவுக்கு வருவாய் கிடைத்தது. திமுக அட்சியில் வருவாய் அதிகரித்தாலும் அதிக கடன் வாங்கியுள்ளனர். எனவே, திமுக அரசு சரியாக செயல்படவில்லை என்பது தெரிகிறது.

திமுக அரசின் தேர்தல் அறிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அவை பட்ஜெட்டில் இடம்பெறும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள் ஆனால் அவை இடம்பெறவில்லை. கல்விக் கடன் தள்ளுபடி பற்றி பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. மகளிர் உரிமைத் தொகையும் அறிவிக்கவில்லை” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x